இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்காக, ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விசேட ஆவணத்தை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலன்று தொடருந்து சேவைகள் வழமைபோல இடம்பெறும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தேர்தல் பணிகளுக்காக தேசிய போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் காரணமாக, போக்குவரத்து சேவையில் பேருந்துகளை ஈடுபடுத்துவதில் ஓரளவு வீழ்ச்சி ஏற்படக்கூடும் என தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், குறித்த தினத்தில் பேருந்துகளை இயன்றளவு அதிகளவில் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தலன்று போக்குவரத்து சேவைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.