சம்பள முரண்பாடு தீர்வு தொடர்பில் திரைசேரி சுற்றுநிரூபத்தை வௌியிடும் வரையில் தாம் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் தெரிவித்துள்ளார்.
எமது கோரிக்கைகள் தொடர்பில் உயர்கல்வியமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. சில கோரிக்கைளுக்கான அனுமதியை பெற கடந்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டது. எனினும் திரைசேரி அதற்கான சுற்றுநிரூபத்தை இன்னும் வௌியிடவில்லை. சம்பள ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்தவது தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடும் பட்சத்தில் நாம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவோம், அவ்வாறின்றி நாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்ற அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊழியர்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவன கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல் உட்பட பல கோரிக்கைளை முன்வைத்து கடந்த 10ம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.