பதில் அதிபர்களின் நிர்வாகத்தில் இயங்கும் 247 தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர்களை நியமிக்க புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறித்த வெற்றிடங்களில் 50 வீதமானவை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பூர்த்தி செய்வதாக டலஸ் அலகப்பெரும உறுதியளித்துள்ளார். எனினும் இது போதாது. இப்பிரச்சினை எதிர்வரும் 2010 தொடக்கம் இடம்பெற்று வரும் பிரச்சினை காணப்படுகிறது. நாம் அமைச்சரை கடந்த வாரம் சந்தித்து அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் அதிபரை நியமிக்குமாறு கோரியுள்ளோம்.
“தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிப்பதில் சிலர் அரைமனதுடன் முயற்சி செய்கின்றனர். 2010 ஆம் ஆண்டு 66 தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 2012 ஆம் ஆண்டு 105 பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு 302 தேசிய பாடசாலை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டது, பொதுச் சேவை ஆணையம் அவற்றை ரத்து செய்து மீண்டும் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஆனால் இதுவரை ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம் என்றும் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.