கடந்த மூன்று வருட காலத்திற்குள் தொழில் வாய்ப்புக்காக 29 நாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களில் 1043 பேர் மரணமடைந்துள்ளார்கள் என இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.
இயற்கை மரணம், வீதிவிபத்துக்கள், தற்கொலை, பணியிட விபத்துக்கள் மற்றும் தண்டனை என்பவற்றினால் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது/
2019 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து டிசம்பா் 4ஆம் திகதி வரை மட்டும் 194 இலங்கைத் தொழிலாளா்கள் இறந்துள்ளார்கள். கடந்த 2018ல் 239 பேரும், 2017ல் 291 பேரும் 2016ல் 295 பேரும் மரணமடைந்துள்ளார்கள். 2016 தொடக்கம் 2019ஆண்டு காலப்பகுதியில் சவுதி அரேபியாவில் மட்டும் 362 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். குவைத்தில் 214 பேரும் கட்டாரில் 133 பேரும், ஜக்கிய அரபு இராச்சியத்தில் 125 பேரும் தென் கொரியாவில் 32 பேர்கள் மரணமடைந்துள்ளனர் இவர்களில் தொழில் அனுபவம் குறைவாக கொண்ட தொழிலாளர்களே அதிகம் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது
கடந்த 2018ம் ஆண்டு இலங்கைக்கு கிடைத்துள்ள அந்நிய செலாவணி 7 பில்லியன் அமெ.டொலர்கள் ஆகும். இது நாட்டின் மொத்த வருமானத்தில் 7.9 வீதமாகும். 2017-2021 ஆண்டு வரை 1.5 மில்லியன் இலங்கையா்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் சனத்தொகையில் 25 வீதமாகும். அவ்வாறு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் அனைவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் காப்புறுதி செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். இக்காப்பறுதியானது வௌிநாடுகளில் பணியாற்றும் காலப்பகுதியில் உயிரிழப்புகள் ஏற்படின் பாதிக்கப்பட்டவரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்க பயன்படும் என்று பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே தொழில்நிமித்தம் வௌிநாடுகளுக்குச் செல்வோர் தமது கடவுச் சீட்டில் காப்புறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பணியகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.