இடைக்கால அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் சம்பளத்தை தற்போது அதிகரிக்க இயலாது. அரச ஊழியர்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் எவ்வித மாற்றங்ளும் இன்றி நிறைவேற்றப்படும் என தகவல் மற்றும் தொடர்பாடல் மற்றும் உயர்கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாத்திரமே மக்களாணையுடன் நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் மக்களால் நியமிக்கப்படவில்லை. இடைக்கால அரசாங்கத்தினால் ஒரு வரையறைகளுக்குட்பட்டே செயற்பட முடியும். அனைத்து பிரச்சினைகளுக்கும் துரிதமான தீர்மானங்களை தற்போது மேற்கொள்வது கடினமானது.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளன.
இடைக்கால அரசாங்கத்தினால் தற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இயலாது. வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தேவையான அடிப்படை விடயங்கள் குறித்தே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆட்சிமாற்றத்திற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு அதிகளவு செல்வாக்கு செலுத்தின. பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் அரச ஊழியர்கள் தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி நிறைவேற்றப்படும்.
பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்: வீரகேசரி