வடமாகாணத்தில் உள்ள ஆயிரத்து 252 வெற்றிடங்களில் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குமாறு வடமாகாண ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மாகாண சபை பேரவை செயலகத்தில் இடம்பெற்ற வட மாகாண சபை அமர்வின்போதே அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமக்கு அரசாங்க நியமனங்களை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 39 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று வட மாகாண சபை அமர்வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், கடந்த மாதம் 14 ஆம் திகதி சபையில் பேசபட்டதற்கமைய, 18 ஆம் திகதி ஆளுநருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு 180 வெற்றிடங்கள், சுகாதார அமைச்சில் 22 வெற்றிடங்கள், முதலமைச்சரின் அமைச்சில் 15 வெற்றிடங்கள், கல்வி அமைச்சில் ஆயிரத்து 51 வெற்றிடங்கள் உள்ளன. இதற்கமைய, மொத்தமாக ஆயிரத்து 252 வெற்றிடங்கள் உள்ளன.
குறித்த வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரிடம் கேட்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.