பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்குவதற்காக மாதம் ஒன்றிற்கு 37.5 மில்லியன் ரூபா மேலதிக நிதி அவசியமாகும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
எனவே, ஜனாதிபதியின் கட்டளையால் மாத்திரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்துவிடாது. எனவே, அது எவ்வாறு வழங்கப்படும் என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்று (16) முற்பகல் பத்தரமுல்லை- பெலவத்தையிலுள்ள ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கட்டளை ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பது தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் நெடுநாள் கோரிக்கையாகும்.
எனினும், ஜனாதிபதியின் உத்தரவால் மட்டும் சம்பள அதிகரிப்பினை (1000) பெற்றுவிடமுடியாது. ஏனெனில் பெருந்தோட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை தனியார் வசமே இருக்கின்றன.
தோட்டத்தொழிலாளர்களுக்கு தற்போது நாட்சம்பளமாக 750 ரூபா வழங்கப்பட்டுவரும் நிலையில், மேலதிகமாக எவ்வாறு 250 ரூபா வழங்கப்படும் என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது தேர்தலுக்காக போட்டப்பட்ட குண்டாகவே கருதப்படும்.
பெருந்தோட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம்பேர்வரை தொழில்புரிகின்றனர். எனவே, அவர்களுக்கு 250 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்காக மாதமொன்றுக்கு 37.5 மில்லியன் ரூபா மேலதிக நிதியாக தேவைப்படுகின்றது.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வரி உட்பட பல நிவாரணங்களை வழங்குவதன் மூலம் இதனை ஈடுசெய்யலாம் என அமைச்சர் ரமேஷ் பத்திரணவும், தேயிலை சபையின் ஊடாக பெறப்படும் கடன் ஊடாகவே இத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிடுகின்றனர்.
எனவே, தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற முயற்சிக்காமல் பொறிமுறை என்னவென்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.