ஓய்வூதியம் பெறுவோரின் வதிவிடம் மற்றும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் என்பவற்றை வருடாந்தம் கணனி மயப்படுத்த தீர்மானித்துள்ளது.
அதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (20) அரச நிருவாக, உள்விவகார, மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தலைமையில் ஓய்வூதிய திணைக்களத்தில் நடைபெற்றது.
தற்போது சுமார் 641,000 பேர் வரை ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதற்காக மாதாந்தம் 250 பில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்குகிறது. இது இவ்வாறு இருக்க சில இடங்களில் இறந்தவர்களின் ஓய்வூதியம் தொடர்ந்தும் வேறு நபர்கள் பெறுகின்றனர். இதனால் மில்லியன் கணக்கான அரச நிதி விரயமாகிறது.
இந்நிலைமையை தடுப்பதற்காக ஓய்வூதியம் பெறுபவர்கள் குறித்த வதிவிடம் மற்றும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதல் என்பன திணைக்களத்தினால் பெறப்படுகிறது. தற்போது அவற்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் முறையினூடாக மேலும் ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்குப் பிறகு ஓய்வூதியம் பெற்றோர் அனைவரினதும் தரவுகள் கணனி மயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோருடைய தரவும் குறுகிய காலத்திற்குள் கணனிமயப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக 80000 பேர் பதிவு செய்யப்படவுள்ளனர். இச்செயற்பாடானது பிரதேச செயலகத்தினூடானாக செயற்படுத்த திணைக்களம் எதிர்பார்த்துள்ளது. அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தற்போது வருடாந்தம் மேற்கொள்ளப்படும் பதிவு நடவடிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒருதடவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதனூடாக மோசடி நடவடிக்கைகைள் முற்றாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப நடவடிக்கையாக குறிப்பிட பிரதேச செயலகங்களில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன் அப்பிரதேச செயலாளர்களுக்கு கணனி அமைச்சரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.