கடந்த திங்கட்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்கள கம்பஹா அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, வனஜீவராசிகள் திணைக்கள பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
அதில் கம்பஹா அலுவலக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தேவானி ஜயதிலக, தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்படமாட்டேன் என, இராஜாங்க அமைச்சரிடமும் பிரதேசவாசிகளிடமும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் 1.4 ஹெக்டயராக காணப்பட்ட நீர்கொழும்பு சின்னடித்தோட்டம் தீவு தொடர்பில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகின்றது.
சில வருடங்களுக்கு முன்பு, வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான இப்பிரதேசத்தின் சதுப்புநிலத்தின் ஒரு பகுதியை எடுத்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, முன்னக்கரய, புனித நிகுலா சிங்கள கலவன் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் இல்லாததனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆயினும், இது அரசாங்கத்திற்கு சொந்தமான காணி என்பதால், விளையாட்டு மைதானத்தை அகற்றக் கோரி கம்பஹா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அலுவலக அதிகாரிகள் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர்.
மீன்பிடி திணைக்களத்தினால் தீவிற்கு ஏற்றி வரப்பட்டு கொட்டப்பட்டிருந்தத மண்ணையும் அகற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைய இந்த விளையாட்டு மைதானம் தொடர்பில் மீண்டும் கடந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தீவுடன் இணைந்ததாக மீன்பிடி திணைக்களத்தினால் களப்பு அபிவிருத்தி திட்டம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இப்பிரச்சினை இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட வனஜீவராசி உத்தியோகத்தர், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட காடுகளை அகற்றி அவற்றை மனித நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது ஒட்சிசன் சதவீதத்தை பாதிக்கும் என்று கூறினார்.
இருப்பினும், வன அதிகாரி கூறிய இவ்விடயத்தை அடுத்து, அங்கிருந்த ஒரு சிலர் அவரை எதிர்த்து பேசத் தொடங்கினர்.
அத்துடன் சதுப்பு நிலங்களை அழிக்க முடியாது என்றும், அது சுற்றாடல் சமனிலையை பாதிக்கும் என்றும் குறித்த உத்தியோகத்தர் தெரிவித்தார்.
ஆசியாவின் சதுப்பு நிலங்களில் சம்பியனாக இலங்கை வருவதற்கான இலக்கு ஒன்று எமக்கு உள்ளது. அதற்காக மேலும் 10 ஆயிரம் ஏக்கர் சதுப்பு நிலங்கள் அவசியமாகும், என உத்தியோகத்தர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, எனது நிலைப்பாடானது நாம் ஒரு சிறிய தீவில் வசிக்கிறோம். ஒருபுறம் வனஜீவராசிகள் திணைக்களம், மறுபுறம் வனப்பாதுகாப்பு, மற்றொருபுறம் கடற்கரை பாதுகாப்பு என இவ்வாறு பல்வேறு சட்டதிட்டங்களுக்குள் அகப்படுகின்றபோது மக்கள் வாழ்வதற்கு இடமில்லாமல் போய்விடும். எனவே சற்று விட்டுக் கொடுத்து இவ்விடயத்தை முடிப்போம் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
அதற்கு பதிலளித்த உத்தியோகத்தர் இது அரசாங்கத்தின் வன பிரதேசமாகும் எனவும், வனப் பிரதேசம் ஒன்றை விளையாட்டு மைதானத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது அங்கிருந்த ஒருவர் வில்பத்துவில் என்ன நடந்தது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த குறித்த உத்தியோகத்தர் அது நான் செய்த ஒரு விடயமல்ல அதனை உரிய அதிகாரிகளிடம் கேளுங்கள் என தெரிவிக்கின்றார்.
“அத்துடன் அமைச்சர் அவர்களே கம்பஹா மாவட்டமே மிகக்குறைந்த வன பிரதேசத்தைக் கொண்டதாக காணப்படுகின்றது. இங்கு 1.6 வீதமான பிரதேசமே காணப்படுகின்றது. இதில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் 18 ஏக்கர் நிலைமே காணப்படுகின்றது. அதில் எமக்கு 1,086 ஹெக்டயர்களே காணப்படுகின்றது. ஆயினும் கச்சேரிகளில் இக்காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?”
நாம் சுவாசிப்பதற்கு ஒட்சிசன் எங்கே உள்ளது?
தற்போது 51 பொய்லர்கள் உள்ளன. ஒரு பொய்லருக்காக 40 தொன் மரங்கள் வெட்டப்படுகின்றன. அந்த 40 தொன் மரங்கள் எரிக்கப்படுவதால் உருவாகும் காபனீரொட்சைட்டை உறுஞ்சுவதற்கான மரங்கள் எங்கே? என கேள்வி எழுப்புகிறார்.
இதன்போது, “மெடம், ஒட்சிசன் இருந்து பலனில்லை இங்கு பிள்ளைகள் போதைமருந்து, கஞ்சா பயன்படுத்துகின்றனர்” என ஒருவர் தெரிவிக்கிறார்.
அதற்கு பதிலளித்த உத்தியோகத்தர், ஒட்சிசன் இருந்து வேலையில்லை என தெரிவிக்கின்ற இவர்கள் தொடர்பில் நீங்களே (அமைச்சரே) சிந்தித்து பாருங்கள் என தெரிவிக்கின்றார்.
Scientific decision (விஞ்ஞான ரீதியாக) முடிவு எடுப்பீர்களா அல்லது கிராமத்திலுள்ள அறியாதவர்களின் விருப்பத்திற்கேற்ப செயற்படப் போகின்றீர்களா என தீர்மானியுங்கள். இவ்வளவு படித்து இவ்வாறான பதவிகளுக்கு நாம் வர வேண்டிய அசியமில்லை என அவர் தெரிவிக்கின்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், மீனவர்களுடன் பிரச்சினைகளை ஏற்படுத்தி இந்த பயணத்தை தொடர முடியாது எனவும் சமாதானமாக போவதே சிறந்தது.
அத்துடன் அவ்விடயத்தை ஓரமாக வைத்துவிட்டு ஏனைய திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் உங்களது உதவி தேவைப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.
“அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை”
“ஆனால் சட்டத்திற்கு அமைய”
“சட்டத்திற்கு புறம்பாக பணி புரிய முடியாது அதைத்தான் நான் சொல்கிறேன்” என அவ்வதிகாரி அதற்கு திட்டவட்டமாக பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த அதிகாரியின் முடிவே சரியானது எனவும், தெளிவின்றிய அரசியல்வாதிகள் இதுதொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், சுற்றாடல், வனஜீவராசிகள் வளங்கள், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவும் தெரிவித்திருந்தார்.