நியமனங்கள் வழங்கப்பட்டவுடன் இடமாற்றம் கேட்க யாரும் வரவேண்டாம். ஆரோக்கியமான இளவயதில் வௌி மாவட்டங்களுக்கு சென்று புதிய அனுபவங்களை பெற ஆர்வமுடையவர்களாக இருங்கள் என்று பட்டதாரிகளுக்கு தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேக்கர தெரிவித்துள்ளார்.
தென்மாகாண சிங்கள மொழி மூல வேலையற்ற பட்டதாரிகள் 699 பேருக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்கும் நிகழ்வு வெலிகம நகரசபை மண்டபத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நாம் நியமனங்களை வழங்கவே விரும்புகிறோம். தகுதியானவர்கள் அனைவரும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள். நான் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் அதிகாரிகளே. ஆசிரியராகும் தகுதியிருப்பின் பிரபாகரனின் மகனுக்கும் நியமனம் வழங்க நாம் தயார். அப்படியான நிலையைத்தான் நாம் தென்மாகாணத்தில் முன்னெடுத்து வருகிறோம்.
நியமனம் கிடைக்காதவர்கள் மனச்சோர்வு அடையத்தேவையில்லை. முயற்சி செய்யுங்கள். நியமனம் கிடைத்தவர்கள் செல்லும் பாடசாலைகளில் ஆசிரியர், அதிபருடன் நல்லமுறையில் பழகுங்கள். கடமையை சரிவரச் செய்யுங்கள். பாடசாலை ஆரம்பித்து முடியும் வரை பிள்ளைகளுக்கு பெற்றோர்களாக செயற்படுங்கள். ஓய்வு பெறும் காலத்தில் மனநிறைவை அனுபவிப்பீர்கள் என்று கூறினார்.