அனைத்து ஆசிரியர் அதிபர்கள் நாளை (26) சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடைக்கால கொடுப்பனவு வழங்கல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆகியன இணைந்து நேற்று (24) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல, புத்ததாச விளையாட்டு மைதானத்தில் இருந்து நடைப்பயணம் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள், கல்வியமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.
2019, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, ஆசிரியர், அதிபர் சேவையானது மூடிய சேவையாக மாற்ற அறிவிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 23 ஆண்டுகளாக இருந்த ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாடுகளை அகற்றவும் அமைச்சரவை முடிவு நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட அமைச்சரவை முடிவை அமுல்படுத்துவதற்கு சில காலம் தேவை என்பதனால் ஒக்டோபர் 15, 2019 அன்று, இடைக்கால கொடுப்பனவுகளுக்கான கல்வி அமைச்சின் மற்றொரு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவு தேசிய சம்பளம் மற்றும் பணியாளர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஆசிரியர் சங்கங்கள் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.
மேற்கூறிய சம்பள திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்று அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.