மாவட்டங்கள் மற்றும் ஊழியர் எண்ணிக்கை அடிப்படையில் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கும் 4 முறைகளைக் கொண்ட புதிய நடைமுறையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இப்புதிய முறைமை தொடர்பான விபரங்கள் அடங்கிய சுற்றுநிருப இன்று (07) வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் அவ்வப்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகளாவனவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் ஒன்றுகூடுவது கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெரும் தடையாகும்.
எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவினால் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.
பொலிஸ் தலைமை அலுவலகம், மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம், தொகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களின் ஊடாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
மேல் மாகாணத்தில் 50 இற்கு மேற்பட்ட ஊழியர்கள்
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் 50 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் பொலிஸ் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும். மேல் மாகாணம் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் கீழ் வரும் 50 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.
ஏனைய மாகாணங்களில் 50 இற்கு மேற்பட்ட ஊழியர்கள்
மேல் மாகாணம் தவிர்ந்த மாகாணங்களில் உள்ள 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.
10 – 50 ஊழியர்கள்
அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் கீழ் உள்ள 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட மற்றும் 50க்கு குறைவான ஊழியர் எண்ணிக்கையை கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.
10 இற்கு குறைவான ஊழியர்கள்
பொலிஸ் அதிகாரப் பிரதேசத்தில் உள்ள 10க்கும் குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அனுமதி அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே விசேட மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் ஆட்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு பொலிஸ் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்களுக்கான விண்ணப்பங்களை எந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை ஏலவே உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். அனுமதிப்பத்திரங்களுக்கு மிகவும் நியாயமான காரணத்துடன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள்…
ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், அதிகார சபைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தமது தொழில் அடையாள அட்டையினை ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும். எனினும் தொழில் நிமித்தமின்றி தமது ஊழியர் அடையாள அட்டையினை துஷ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.