வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை மீள அழைத்து வருவதில் முன்னுரிமையளிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க விளக்கமளித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு விளக்கமளியத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கேள்வி – இதுவரை, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கை மாணவர்களையும், இலங்கைக்குத் நாடு திரும்புவதற்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்திய மாணவர்களையும் மீள அழைத்து வரும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், இப்போது அரசாங்கத்தின் கவனம் குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஏனைய எந்தவொரு நாட்டிலுமுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது திருப்பி விடப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார செயலாளராக, முழுமையான இந்த செயன்முறை குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்; – இதை ஒரு திசைதிருப்பும் விடயமாக நான் பார்க்கவில்லை. திரும்பி வர அனுமதிக்கப்பட்டு, நாட்டிற்கு மீள அழைத்து வருவது தொடங்கப்பட்டால், அது அதிகபட்சமான பாதிக்கப்படும் தன்மையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எப்போதுமே வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் நோக்காகும். அந்த அடிப்படையில்தான், தெற்காசிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைத்ததுடன், அது ஒரு வாரத்திற்கு முன்புதான் நிறைவடைந்தது.
இப்போது மாணவர்களைக் கொண்ட பல குழுக்களும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக அவர்கள் மேலும் அழைத்து வரப்படுவர். ஒரு மாதத்திற்கு முன்னர் நாங்கள் சமர்ப்பித்த உண்மையான அமைச்சரவைப் பத்திரத்தில் நாங்கள் முன்வைத்த விடயமான, வெளிநாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட வேண்டிய வகைக்குட்பட்டவர்களாதலால், மாணவர் குழுக்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு இணையாக தொழிலாளர்களை அழைத்து வருவதிலும் சிறப்பாக கவனத்தை செலுத்தி, அவர்கள் மீள நாடு திரும்புவதை எளிதாக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்துவதே வெளிநாட்டு உறவுகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் முக்கியத்துவமாகும்.
இந்த சூழலில், ஏராளமான இலங்கையர்கள் நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்பும் மாலைதீவை தற்போது நான் நோக்குவதுடன், குறிப்பாக மாலி தீவில் சுமார் 1200 – 1500 பேர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக வாழ்கின்றனர்.
குவைத் போன்ற இடங்களில், மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளிலான பொதுவான கோவிட் பாதிப்புக்கும் மேலதிகமாக, குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பும் உள்ளதுடன், இந்தப் பொது மன்னிப்பை இழந்தால் அவர்கள் வெளியே வருவதற்கும், சட்டப்பூர்வமாக ஒருநாள் அங்கே மீளத் திரும்புவதற்கும் அதிக சிரமம் ஏற்படும் என்ற வெளிநாட்டு ஊழியர்கள் தரப்பினரின் கவலை குறித்து நாங்கள் அறிவோம். இந்த நேரத்தில் குவைத் அரசாங்கம் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு முன்வந்துள்ளது.
உண்மையில், அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள நிலையில், குறித்த பொது மன்னிப்புச் சலுகையை இலங்கை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு செயன்முறை குறித்து கலந்துரையாடி, குவைத் பிரதிநிதிகளுடன் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் ஈடுபடப் போகின்றார். நாங்கள் இந்த செயன்முறையைத் தொடங்குவோம், எனினும் இந்தக் கட்டத்தில் நாட்டிற்கு வர விரும்பும் அனைவரையும் அழைத்து வர முடியாது என்பது தொடர்பில் குவைத் அரசாங்கம் மிகுந்த விழிப்புடன் உள்ளது. எனவே, நாங்கள் அவர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து சில பேச்சுவார்த்தைகளை இரு அரசாங்கங்களுக்கிடையில் நடாத்த வேண்டும்.
மீண்டும் கொவிட்-19 தொற்று நோய் மிகவும் விரைவான வேகத்தில் பரவி வரும் பங்களாதேஷ் போன்ற இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிபுரியும் வெளிநாட்டிலுள்ள இலங்கையரின் பிரச்சினையும் உள்ளதுடன், அவர்களில் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். மத்திய கிழக்கிலிருந்தும், ஏனைய இடங்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர் வகைகளை மீள அழைத்து வருவதில் இதேபோல் கவனம் செலுத்துவோம்.
ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு உள்ளுர் தனிமைப்படுத்தல் வசதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்வதே அமைச்சரவைப் பத்திரத்தின் இரண்டாவது அம்சமாகும். மூன்றாவதாக, பெருமளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் தற்போதைய இருப்பிடங்களில் தக்கவைத்துக்கொள்வதற்கும், உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு தொடர்ச்சியாக அவை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான இராஜதந்திரப் பிரதிநிதித்துவத்தை அமைச்சரவைப் பத்திரம் குறிப்பிடுவதுடன், இதனை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆதரவுடன் தூதரகங்கள் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகின்றது.
இந்தக் கட்டத்தில் இது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன், ஏனெனில், வீசாவின் நீடிப்பு, வாடகை கோரும் நில உரிமையாளர், கட்டண நிலுவையைக் கோரும் வணிகப் பங்குதாரர், தங்குமிடம் தேடும் சிலர் மற்றும் தன்னுடன் தங்குவதற்கு ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கும் ஒருவர் அல்லது உணவு இல்லாத ஒருவர் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சில நேரங்களில் மருந்துகளைக் கோருதல் போன்ற அவ்வப்போது வரும் பிரச்சினைகள் தூதரகங்களின் தலையீட்டால் தீர்க்கப்படலாம்.
மத்திய கிழக்கில் மட்டுமல்லாமல், உலகெங்கிலுமுள்ள எமது தூதரகங்கள் வெளிநாடுகளிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் மதிப்புமிக்க உதவிகளை வழங்குகின்றன.
இயற்கையாகவே எமது திறன் நிதி ரீதியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, எனினும் இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அந்த நாடுகளிலுள்ள ஏனைய மனிதநேய அமைப்புக்கள், தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத அமைப்புக்களுடன் சேர்ந்து அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க விளக்கமளித்துள்ளார்.