உலகளாவிய ரிதியில் கொரோனா வைரஸ் கட்டுபாடுகளுடன் முடக்கப்பட்டிருந்த பல நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தமது பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள உள்ளது
இதன்படி, லண்டன், டோக்கியோ (நரிட்டா), மெல்போர்ன், மற்றும் ஹொங்கொங்கிற்கு தமது பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
அந்தந்த நாட்டு பயண ஆலோசனைகளின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் நாளை முதல் (13) விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.
இந்த இடங்களுக்கு அல்லது அதற்கு அப்பால் பயணிக்க விரும்பும் பயணிகள் இலங்கை அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள பயண முகவர் மூலமாகவோ டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், லங்கையின் ஏற்றுமதியை வளப்படுத்துவதற்காக 17 இடங்களுக்கு சிறப்பு சரக்கு விமானசேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சென்னை, ஹொங்கொங், சிங்கப்பூர், லண்டன், டோஹா, துபாய், மெல்போர்ன், பெய்ஜிங், குவாங்சோ (கேன்டன்) மற்றும் ஷங்காய் ஆகிய நாடுகளுக்கு வாரத்திற்கு இரண்டு விமானங்களும், மும்பை, கராச்சி, லாகூர், டாக்கா, பிராங்பேர்ட் மற்றும் டோக்கியோ (நரிடா) ஆகிய நாடுகளுக்கு வாரத்திற்க தலா ஒரு விமானமும் பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் பயணிகள் ஒவ்வொரு நாட்டிலும் ஒழுங்கு முறைகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமைய அந்தந்த நாடுகளுக்குள் செல்வதற்கு தகுதியுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.