இம்மாதம் 16ம் திகதி சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்விசேட தினத்தை முன்னிட்டு உலக நாடுகள் பலவற்றில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்தனர். புதிய கொவிட் 19 தொற்று காலப்பகுதி மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் வீட்டுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது என்பதே உண்மை. எனவே இம்முறை இச்சர்வதேச தினத்தில் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட “வீட்டுப் பணியாளர்களுக்கும் கண்ணியமான தொழில்” இற்கான ILO C189 சாசனத்தை தமது நாடுகளில் நிறைவேற்றுவது தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வீட்டுப் பணியாளர்களுக்கான முறையான திட்டம் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இச்சாசனத்தை இலங்கையிலும் நிறைவேற்றுவது தொடர்பில் ப்ரொடெக்ட் வீட்டுப் பணியாளர்களுக்கான சங்கத்தின் அங்கத்தவர்களான வீட்டுப் பணிப்பெண்களினால் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய, கொழும்பு, ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் வீட்டுப் பணியாளர்கள் தமது வீடுகளில் மற்றும் தமது தொழில் தருநர்களின் வீடுகளில் பதாதைகளை காட்சிப்படுத்தினர். வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளை சட்டமாக்குமாறும், கொவிட் 19 இற்கு பின்னரான காலப்பகுதியில் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்று தருமாறு கோரி, அக்கோரிக்கைக்கு அழுத்தம் செலுத்தும் வகையில் இப்பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கொவிட் 19 காரணமாக சுமார் 4 மாதங்கள் வரையான காலப்பகுதியில் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமக்கு நீண்டகால மற்றும் குறுகிய கால தீர்வுகளை வழங்குமாறும் இப்பணிப்பெண்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். ஏனெனில் இவ்வாறான தொற்றுநோய் ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுப்பதற்கு ஏற்ற பொறிமுறையொன்று அவசியமானது என இவ்வீட்டுப் பணிப்பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சில தொழில்வழங்குநர்களும் இந்நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்கியமை விசேட அம்சமாகும்.
ப்ரொடெக்ட் சங்கமானது வீட்டுப் பணிப்பெண்கள் தினத்தில் ஆரம்பித்த இப்புதிய திட்டங்களினூடாக விரைவில் ILOC189 சாசனத்தை இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக அமையும் என்பது அனைவரினதும் நம்பிக்கை.
கல்ப்ப மதுரங்க
வேலைத்தளம்