11ஆம், 12ஆம், 13ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக நாளை 27 ஆம் திகதி முதல் அனைத்து அரச பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, 11ஆம், 12ஆம், 13ஆம் தரங்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரையில் பாடசாலையில் கற்றல் நடவடிக்கை இடம்பெறும் அறிக்கை ஒன்றின் ஊடாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏனைய தரங்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும்போது, சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவைகள், கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விசேட ஆலோசனைகள் என்பனவற்றுக்கு அமைய பாடசாலைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களும், பிரதி அதிபர்களும் எதிர்வரும் 28ஆம், 29ஆம், 30ஆம், 31ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பில் பாடசாலைகளை ஆயத்தப்படுத்துவதற்கும், அது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, உதவி ஆணையாளர்களுடன் கலந்துரையாடி, தேர்தல் பணிகளுக்காக பாடசாலைகளில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பாடாசலைகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.