தேர்தல் காலம் நிறைவடைந்ததன் பின்னர் தொழிலற்ற பட்டதாரிகளுக்கான தொழிலுக்கான பயிற்சிகளை சம்பளத்துடன் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் கொழும்பில் இன்று (02) நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலுடன் தொழிலை எதிர்பார்க்கும் பட்டதாரிகள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நியமனங்கள் கிடைத்துள்ளன. ஆனால் பயிற்சிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஓகஸ்ட் 10ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்தப் பயிற்சிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? என்ற கேள்விக்கு பெஸில் ராஜபக்ஷ பதலளிக்கையில்,
நாட்டில் தொழில் அற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதாக பிரதமருடன் இணைந்து ஜனாதிபதி உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.
இதில் சில நியதிகளை கையாளவேண்டும். பயிற்சி வழங்குவதில் சில தடைகள் ஏற்பட்டிருந்தால் அது தேர்தலின் காரணமாகவே ஏற்பட்டுள்ளது.
தேர்தல் சட்டம் செல்லுபடியாகும் காலம் எது என்பது அரசியலமைப்பிலும், தேர்தல் சட்டத்திலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவர்களுக்கான தொழிலுக்கான பயிற்சிகளை சம்பளத்துடன் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.