கல்வியுரிமை மீதான தாக்குதலாக அமைந்துள்ள அமைச்சரவை தீர்மானம்

பாடசாலை வகுப்பறையொன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை 45 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது மாணவர்களின் கல்வியுரிமை மீதான தாக்குதல் என மக்கள் ஆசிரியர் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக மட்டுப்படுத்தி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி தற்போது 45 ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆசிரியர் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் ​மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாடசாலையில் வகுப்பறையொன்றில் இருக்கக்கூடிய அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கையை 45ஆக உயர்த்த ஒக்டோபர் 05ஆம் திகதி இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை மக்களின் கல்வி உரிமை மீதான மற்றுமொரு தாக்குதலாகும்.

கொவிட் – 19 பிரச்சினையானது ஆட்சியாளர்களுக்கு பாடசாலை கல்விப் பற்றிய விடயத்தில் மிகவும் காத்திரமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பினை தந்திருந்தது. எனினும் ஆட்சியாளர்களோ மாணவர்களின் கல்வி மற்றும் ஆசிரியர்களின் பணிக்கு மேலும் சவால்களை ஏற்படுத்தும் வகையில் எவ்வித தர்க்க அடிப்படையுமின்றி இவ்வாறு வகுப்பொன்றில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 35ஆக இருக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாகவே இந்த அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தீர்மானம் ஆசிரியர் சங்கங்களுடனான கலந்துரையாடலின் பின்னரோ அல்லது கல்வியியலாளர்களின் பரிந்துரைக்கு அமைவாகவோ எடுக்கப்பட்டதல்ல.

ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் முறையான கற்பித்தலையும் வகுப்பறை முகாமைத்துவத்தையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையிலேயே அமைய வேண்டும். அதுவே மாணவர்களின் அடைவு மட்டங்களின் உயர்வுக்கும் ஆளுமை விருத்திக்கும் வழிவகுக்கும். அந்த அடிப்படையிலேயே ஒரு வகுப்பறையில் இருக்க வேண்டிய அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கையை 20 – 25ற்கும் இடையில் இருக்க வேண்டும் என சர்வதேச நியமங்கள் குறிப்பிடுகின்றன. இது வகுப்பறையொன்றின் பௌதீக அளவையும் கருத்திற் கொண்டு தீரமானிக்கப்பட்ட எண்ணிக்கையாகும். எனினும் சில நாடுகளின் சனத்தொகை, பௌதீக வளங்களை அடிப்படையாகக் கொண்டு 30 – 35ஆக வகுப்பறைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒரு வகுப்பறையில் 45 மாணவர்கள் என்பது வகுப்பறையில் இட நெருக்கடியை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வி சுதந்திரத்தை மறுக்கும் செயலாகும். அத்தோடு குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் நகர பாடசாலைகளுக்கு மாணவர்கள் குவியும் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு கிராமப்புர தோட்டப்புர பாடசாலைகள் வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுவது உறுதி செய்யப்படும். எனவே இதனூடாக கல்வியில் சமமின்மை மேலும் அதிகரிப்பதாகவே அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரா. நெல்சன் மோகன்ராஜ்
பொதுச் செயலாளர்
மக்கள் ஆசிரியர் சங்கம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435