இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் ஏனைய சுகாதார வசதிகள் ஒழுங்கான முறையில் நடைபெறுவதில்லை என்றும் டிப்போக்கள் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை மிகவும் மந்தகதியில் நடைபெறுவதாகவும் அகில இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பஸ்களில் பயணிக்கும் பயணிகள் குறித்த எவ்வித தௌிவும் இல்லாதநிலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகும் அபாயம் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், குறித்த ஊழியர்கள் தாம் பணியாற்றும் பஸ்களிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்றும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சுகாதார வீரர்கள் , இராணுவ வீரர்கள் ஆகியோருக்கு சமமான இலங்கை போக்குவரத்து சேவை வீரர்களும் மிக முக்கியமான சேவையினை வழங்கிய போதிலும் ஊடகங்களோ, அரசியல்வாதிகளோ அவர்களுடைய சேவைக்கு உரிய மதிப்பை வழங்க தவறியுள்ளனர் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தௌிவுபடுத்தப்பட்ட கடிதமொன்றை சங்கத்தின் செயலாளர் சேபால லியனகே ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொவிட் 19 தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து சுகாதார செயற்பாடுகளையும் இலங்கை போக்குவரத்து சபை, அதன் டிப்போக்கள் என்பவற்றில் உடடியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.