கொவிட் ஒழிப்புக்காக ”பாதுகாப்பாக இருப்போம்” – (“Staysafe” digital system) இலத்திரனியல் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும் சவாலாக உள்ள கொவிட் தொற்றாளர்களின் தொடர்புகளைக் கண்டறிவதில் உள்ள சிரமங்கள் மற்றும் நோய்க்காவிகளின் சுழற்சி என்பவை கொவிட் பரவுவதைத் தவிர்த்தல் என்பவற்றுக்கு தீர்வாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வா இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். QR குறியீட்டின் அடிப்படையில் அமைந்துள்ள இத்திட்டமானது கொவிட் 19 தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் – தனியார் மற்றும் அரச துறை நிறுவனங்களும் – அனைத்து மக்களும் இலகுவாக பயன்படுத்தக் கூடிய எளிய முறைமையில் நடைமுறைப்படுத்தப்படும்.
Staysafe.gov.lk – என்ற இணையத்தளத்திற்குச் சென்று அனைத்து நிறுவனங்களுக்கும் தனித்துவமான QR குறியீட்டை பெற முடியும். நாளை (07) முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தமது திறன்பேசிகளைப் (Smart Phones) பயன்படுத்தி, எந்தவொரு நிறுவனத்தினாலும் தமது பெயர், முகவரி, உரிமையாளரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை வழங்கி மிகவும் இலகுவாகத் தமக்கான QR குறியீட்டை பெற்றுக்கொள்ள முடியும். திறன்பேசிகள் உள்ள , இல்லாத அனைவரையும் பதிவுசெய்து அவர்கள் சென்று வரும் அனைத்து இடங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.