பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்திருந்தமை தொடர்பில், அரசியல்வாதிகளும், தொழிற்சங்கத்தினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய தேவை அடிப்படை சம்பளம் 1000 ரூபாவே தவிர எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துவரும் 1000 ரூபா சம்பளம் அல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) வியாழக்கிழமை நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலையின் 2 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
2015ம் ஆண்டில் இருந்து 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுத் தருவதாக கூறி கடந்த ஐந்து வருடங்கள் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். 1000 ரூபா பெற்றுத் தருவதாகக் கூறி இரண்டு கூட்டு ஒப்பந்தங்கள் முடிந்துள்ளன. தற்போது மூன்றாவது கூட்டு ஒப்பந்தமும் வரப்போகிறது. இந்நிலையில் மற்றுமொரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2021 ஜனவரி மாதம் தொடக்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
இதனை செலுத்த தவறும் கம்பனிகளின் உடன்படிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்படும் என வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது அறிவிப்பில் 1000 ரூபா அடிப்படை சம்பளம் என்று கூறவில்லை.
உண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய தேவை அடிப்படை சம்பளம் 1000 ரூபாவே தவிர எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து வரும் 1000 ரூபா சம்பளம் அல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று அடிப்படை சம்பளமாக 700 ரூபா வழங்கப்படுகிறது. எனவே 1000 ரூபா அடிப்படை சம்பளம் பெறுவதற்கு இன்னும் 300 ரூபா மாத்திரமே தேவை.
இந்த 300 ரூபாவை வழங்குமாறுதான் நாம் வலியுறுத்தி வருகிறோம். குறித்த 300 ரூபாவும் அடிப்படை நாள் சம்பளமாகவே அதிகரிக்கப்பட வேண்டும். மாறாக வரவுக் கொடுப்பனவுஇ மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவுஇ ஈபிஎப் போன்றவற்றை சேர்த்து ஆயிரம் ரூபா வழங்கி மக்களை ஏமாற்றக்கூடாது. காரணம் தொழிலாளர்கள் அனைவருக்கும் 75 சதவீத வேலை நாட்களை பூர்த்தி செய்ய முடியாது.
அனைத்து தொழிலாளர்களுக்கும் மேலதிக கொழுந்து பறிக்க முடியாது. இதனை முக்கியமாக கருத்திற் கொள்ள வேண்டும். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியாக சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும்.
எனவே இந்த புதிய ஒப்பந்தத்தின் ஊடாகவே சம்பள உயர்வு பற்றி பேச முடியும் என பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 1000 ரூபா சம்பளம் வழங்குவது எப்படி என அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 1000 ரூபா அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும் இருக்க வேண்டுமென தவிர அது சரிசெய்யப்பட்ட மொத்த கூட்டுத்தொகை சம்பளமாக இருந்தால் ஏற்க மாட்டோமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இதாராகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
1000 ரூபா சம்பளம் என்பது 5 வருடங்களுக்கு முன்பு முன்வைத்த யோசனையாகும். அதனையே பிரதமர் மீண்டும் முன்மொழிந்துள்ளார். 22 தோட்டக் கம்பனிகளும் ஒத்துக்கொண்டால்தான் அதனையும் வழங்க முடியும். தேர்தல் பிரசாரத்திலும் 1000 ரூபா கிடைக்குமென கூறினார். பாராளுமன்றத்திலும் பல தடவைகள் கூறியுள்ளார். தற்போது வரவு – செலவுத் திட்டத்திலும் முன்மொழிந்துள்ளார்.
ஆனால்இ 1000 ரூபா கிடைக்கும்வரை எவ்வித நம்பிக்கையும் எமக்கு இல்லை. 1000 ரூபா வழங்கப்பட்டால் அதனை வரவேற்கிறோம். ஆனால்இ அது அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும். நிபந்தனையற்ற விதத்தில் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும். மாறாக ஒட்டுமொத்த கூட்டுத்தொகையாக இருக்கக் கூடாது. அவ்வாறான சம்பளத்தை ஏற்க மாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வே.இதாராகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்குவதாக கூறிய பொழுதும் அதனை வழங்க முடியாது என அன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறினார்கள். எனவே பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ள 1000 ரூபா கிடைக்குமா? என்பது சந்தேகமே என சிரேஸ்ட தொழிற்சங்கவாதி புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலார்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியும். கூட்டு ஒப்பந்தம் மூலமாக அல்லது சம்பள நிர்ணய சபையின் மூலமாக அரசாங்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை அதிகரிக்க முடியாது. ஆனால் அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களுடைய மாதாந்த செலவை ஈடு செய்து கொள்வதற்காக மானியம் வழங்க முடியும். மேலும் தோட்ட கம்பனிகளை எந்த காரணம் கொண்டும் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது சம்பள உயர்வை வழங்குங்கள் என்று.அதற்கான ஒரு சட்டத்தையும் கொண்டு வர முடியாது.அப்படி செய்தால் அவர்கள் நீதிமன்றத்தை நாட முடியும்.ஆனால் கம்பனிகள் ஒத்துக் கொண்டு அதனை செய்ய முடியும்.
ஆனால் அது சாத்தியமா? ஏனென்றால் இப்பொழுது கம்பனிகள் கூறுகின்றன எங்களுடைய 18 கிலோ என்ற நிர்ணய தொகையை கூட தொழிலாளர்களால் கொழுந்து பறிக்க முடியாமல் இருக்கின்றது.ஆனாலும் நாங்கள் சம்பளம் வழங்குகின்றோம்.ஒரு சில தோட்டங்களில் 18 கிலோ பறிக்கின்றார்கள்.ஆனாலும் ஒரு தோட்டத்தில் ஒரு சம்பளமும் இன்னொரு தோட்டத்தில் வேறு ஒரு தொகையையும் வழங்க முடியாது.
ஆனால் இதன் உண்மை தன்மையை நாம் அறிந்து கொள்ள முடியும்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் பொழுதே.அதுவரையில் நாம் காத்திருக்க வேண்டும்.ஏனென்றால் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக பலமுறை பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த பொழுதும் அது நடைமுறைக்கு வரவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்று புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைத்துவிட்டால் தங்களுடைய அரசியல் இருப்பும்இ தொழிற்சங்க இருப்பும் கேள்விக்குறியாகி விடும் என்பதனாலேயே எதிரணி தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற கடந்த 5 வருட ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்போம் என்று முழங்கியவர்களே இன்று அது கிடைப்பதில் சந்தேகம் என்று கருத்து வெளியிடுகிறார்கள். இறுதியாக ஜனாதிபதித் தேர்தலின்போது எதிரணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸயுடன் இணைந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம் என்று சூளுரைத்து விட்டு தற்போது ஆயிரம் ரூபா கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
இன்று வரவு செலவுத் திட்ட உரையில் பிரதம மந்திரி அறிவித்த ஆயிரம் ரூபா சம்பளம் கிடைப்பது கூட சந்தேகம் என்ற கருத்தையும் அவர்களே தெரிவிக்கின்றனர். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்ட பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சரே கம்பெனிகள் சார்பாக செயற்பட்டு 1000 ரூபா சம்பள உயர்வை கொடுக்க முடியாது என்று கூறிய நிலைமை இன்று மாற்றப்பட்டிருக்கிறது. 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவும் வெளியிடப்பட்டிருக்கிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாது தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமென சமகால அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் கட்டாயம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென சான்றிதழ் அளித்தனர். தற்போது நவம்பர் மாதமும் முடிவடையவுள்ளது. எவ்வித நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெறவில்லை. தோட்டத் தொழிலாளர்கள் தெளிவாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.
பிரதமரால் பாராளுமன்றில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி அவராலே மீறப்பட்டுள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காகவேனும் வார்த்தையையாவது இதில் இடம்பெற செய்ய வேண்டுமென பிரதமர் முயற்சி எடுக்கவில்லை. தேர்தலை மையப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளமையையே இவர்கள் செய்துள்ளனர். ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் தற்போது அதற்கு தயார் இல்லை என்பதே இவர்களின் செயற்பாடுகளில் தெளிவாக விளங்குகிறது என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மூலம் : மலைநாடு செய்திகள்