பிரபல தனியார் வங்கியான ஹட்டன் நஷனல் வங்கியானது தனது ஊழியர்களின் உரிமையை புறக்கணித்து மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி கவனயீர்ப்பு போராட்டமொன்றில் சுதந்திர தொழிற்சங்க ஒருங்கிணைப்பு ஈடுபட்டது.
தொழிற்சங்களின் கோரிக்கைகளை ஹட்டன் நஷனல் வங்கி நிர்வாகம் பொருட்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாக இத்தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கை அரசியலமைப்பு மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களினூடாக தொழிற்சங்கங்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமைக்கு பிரதான காரணம், அவை மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக குரல்கொடுப்பதனால் ஆகும் என்று சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர தொழிற்சங்க ஒருங்கிணைப்பு, வங்கி நிர்வாகமானது அவ்வுரிமைகளை மீறியுள்ளதுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது காலம் தாழ்துவதாகவும், பேச்சுவார்த்தைகளில் வெளிப்படைத்தன்மையின்மை, பொறுப்புக்களை மீறுகின்றமை போன்ற செயற்பாடுகளினால் ஊழியர்களின் உரிமைகள் மீறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக செயற்படும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படும் வங்கி நிர்வாகமானது ஊழியர்களின் கருத்து தெரிவிக்கும் அடிப்படை உரிமையை கூட மீறும் வகையில் செயற்படுகிறது.
இன்று ஹட்டன் நஷனல் வங்கியில் ஆரம்பிக்கும் போராட்டம் எதிர்காலத்தில் அனைத்து வங்கிகளுக்கும் எதிராக நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளின் தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்த ஆரம்பித்தால் விளைவு ஆபத்தானது. இவ்வங்கியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன கொத்தடிமைத்தனமான நிர்வாகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் தொடர்ந்தால் நிர்வாகத்துடன் கொத்தடிமைத்தனத்தையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என்றும் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் அப்பெயருக்கேற்றாற் போல் நல்லாட்சியுடன் அநீதியான நிர்வாகத்தை நிறுத்த முன்வரவேண்டும் என்றும் சுதந்திர தொழிற்சங்க ஒருங்கிணைப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்