ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா பரவல் – சுயாதீன விசாரணை அவசியம்

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா பரவல் ஏற்பட்டமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் திருப்தியடைய முடியாது என்று அந்த சங்கத்தின் இணை செயலாளர் எண்டன் மார்க்ஸ் தெரிவித்தார்.

சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் சங்கத்தின் இணை செயலாளர் எண்டன் மார்க்ஸ் எமது இணையதளத்திற்கு வழங்கிய செவ்வி கீழே…

கேள்வி: கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலை ஏற்பட்டுளளது. தற்போது அங்குள்ள நிலைமை எவ்வாறுள்ளது?

பதில்: கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தற்போது மூன்று தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சீட் வே என்ற ஒரு ஆடை தொழிற்சாலையில் ஒருவருக்கும், நெக்ஸ்ட் தொழிற்சாலையில் சிலருக்கும், அதாவது அங்கே சுமார் பதினைந்து பேரளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அடுத்ததாக ஷெடோ லைன் தொழிற்சாலையிலும், ஏடிடி சிலோன் என்ற தொழிற்சாலையும் அங்கே மூடப்பட்டிருக்கின்றது.

ஏனைய அனைத்து தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் உள்ள ஊழியர்களை தவிர்த்து, ஏனைய பகுதிகளில் உள்ள ஊழியர்களை கொண்டு உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கேள்வி: இந்த தொழிற்சாலைகளில் எத்தனை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்?

பதில்: இந்த நான்கு தொழிற்சாலைகளிலும் சுமார் 2000 பேர் பணிபுரிகின்றனர். கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் சுமார் 66 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவற்றில் சுமார் 37 ஆயிரம் பேரளவில் பணியாற்றுகின்றனர்.

கேள்வி:பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் நிலைமை தற்போது எவ்வாறு இருக்கின்றது?

பதில்: அந்த ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் அது தொடர்பில் ஒரு சுயாதீன விசாரணைக் கோரிக்கையை நாங்கள் இராணுவத் தளபதியிடம் முன்வைத்துள்ளோம்.

இந்த விடயம் தொடர்பில் முழுமையான சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமெனக் கோரி இராணுவ தளபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம்.

ஆடைத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். அதாவது குறிப்பாக அந்த நிறுவனத்திற்கு இந்தியாவிலிருந்து ஊழியர்கள் அழைத்துவரப்பட்டு, உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையானவையா? இல்லையா? விசாரணை மூலம் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நிலைமையானது ழுமு ஆடைத் தொழில் துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கேள்வி: தற்போதைய காலப்பகுதியில் எவரும் தொழிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்களா?

பதில்: இதுவரையில் எவரும் தொழிலில் இருந்து நீக்கப்படவில்லை. அவ்வாறானதொரு நிலைமைக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். அத்துடன், இந்தக் காலப்பகுதியில் தொழிலாளர்களுக்கு உரிய முறையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

கேள்வி: தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் நீங்கள் திருப்தி அடைகின்றீர்களா?

பதில்: இல்லை. நாங்கள் திருப்தியடையவில்லை. உரிய முறையில் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே நாங்கள் சுயாதீன விசாரணை கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

கேள்வி: கம்பஹா மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா பரவல் ஏற்பட்டதை அடுத்து, அந்த மாவட்டம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: முடக்க நிலையை அமுல்படுத்துவது இதற்கான தீர்வு அல்ல என்பதை உலகமே தற்போது அவதானம் செலுத்தி வருகின்றது. முடக்கநிலையை அமுல்படுத்தினால், முழு பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முடக்க நிலையை அமுலாக்கிய நாடுகளில்கூட அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், கொரோனாவும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

இதன்காரணமாக, முடக்க நிலையை அமுல்படுத்தாமல் இதனைக் கட்டுப்படுத்த செயற்படுவதே தற்போது உலகத்தின் புதிய நடைமுறையாக உள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, கொவிட்-19 ஆனது அடுத்து இரண்டு வருடங்களுக்கும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான நிலைமைக்கு மத்தியில், பாதிப்பை குறைத்துகொண்டு தொழிலாளர்களின் தொழில், வருமானம் சுகாதாரம் என்பனவற்றை பாதுகாப்பதுக்கொண்டு எவ்வாறு முன்னோக்கி செல்வது என்பதையே தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் நாங்க் பார்க்கின்றோம்.

கேள்வி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் ஆடைத் தொழில் துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்தத் துறையில் பணியாற்றும் ஊழியர்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு கையாள்கின்றீர்கள்?

குறித்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கையாளப்பட்ட விதம் மிகவும் தவறானது. எனவே, தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில முறையிடுமாறு தொழில் அமைச்சர் அறிவித்திருக்கின்றார்.

அந்த நிறுவனம் தொழிலாளர்களை கையாண்ட விதம் மிகவும் சட்டவிரோதமானது. எனவே அந்த நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் தொழில் ஆணையாளரிடம் கோருகின்றோம். இது தொடர்பான விபரங்களை நாங்கள் எழுத்து மூலம் முன்வைக்க இருக்கின்றோம்.

இலங்கை முழுவதும் ஆடை தொழில் துறையில் சுமார் ஐந்து லட்சம் பேர் அளவில் பணியாற்றுகின்றனர். இந்த நிலைமை எவ்வாறாயினும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களுடைய கருத்தாக இருக்கிறது. ஏனெனில் இந்த நிலைமை நீடித்தால் முழு ஆடைத் தொழிற்துறையிலும் பாதிப்பு ஏற்படும். அது தொழிலாளர்களை பாதிக்கும்.

ஆடை உற்பத்தி தொழிற்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நாங்கள் அனைவரும் முயற்சிக்கின்றோம். குறிப்பாக அவர்களுடைய தொழில் மற்றும் வாழ்க்கைத் தரம், வாழ்விடம் என்பனவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில், எங்களது சங்கத்தில் உள்ள அங்கத்தவர்களுனுடன் கலந்துரையாடி யோசனைத் திட்டம் ஒன்றை தயாரிக்க இருக்கின்றோம்.

என்று சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் சங்கத்தின் இணை செயலாளர் எண்டன் மார்க்ஸ் தெரிவித்தார்.

பாரதி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435