ஒரு ஊழியருக்கு பாலியல் துன்பத்தால் ஏற்படும் இழப்புகளை அறிவீர்களா?

இன்று உலகில் காணப்படும் அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்கள் பணிபுரிகின்றனர். சாதாரண உடல் உழைப்பு முதல், விண்வெளி ஆய்வு வரை பெண்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக காணப்படுகின்றது.

தனியார் துறைகளில் அதாவது ஸ்தாபனமயமற்ற மற்றும் முறைசாரா தொழிற்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக காணப்படுகின்றது. இப்பெண் தொழிலாளர்களை ஸ்தாபனமயமான தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அணித்திரட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை.

இவர்கள் ஓரிடத்தில் தொடர்ச்சியாக வேலை செய்யாமல் இருக்கின்றமையினால் தொழிற்சங்கங்கள் இவர்களை அணித்திரட்டுவதில்லை. தனியார் துறை தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் கடை, பணிமனைச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டிருந்தாலும்கூட தொழில் தருநர்களால் இவ்வுரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இவர்களது தொழில் உரிமை மீறல்களுக்கு பிரதான காரணம் இவர்கள் தொழிற்சங்க ரீதியில் அணித்திரளாமல் இருப்பதுடன், தொழில் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வின்மையுமேயாகும். அதுமட்டுமன்றி அரசத்துறையாக இருந்தாலென்ன தனியார் துறையாக இருந்தாலென்ன அதிகமான பெண்கள் வேலைத்தளத்தில் பாலியல் சீணடல்களுக்கு ஆளாகின்றனர்.

தனியார் மற்றும் அரச துறைகளில் பணிபுரியும் பெண்கள் வேலைத்தளத்தில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிய போதிலும், அதற்கெதிராக முறைபபாடுகள் செய்வதில்லை. அத்துடன் பாலியல் சீண்டல்கள் என்றால் என்ன மற்றும் அவ்வாறு நடைபெற்றால் அதுபற்றி முறையிடுவதற்கு உரிய இடமின்மை போன்ற காரணங்களால் பெண்கள் சகித்துக்கொண்டு பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்விடயம் பற்றி பெண்கள் தற்போது பேச ஆரம்பித்துள்ளதுடன், உலக தொழிலாளர் ஸ்தாபனம் பாலியல் சுரண்டல்கள் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது. அதேவேளை பாலியல் சீண்டல்கள் தொடர்பாக சமவாயம் 190 என்பதனை பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் சுரண்டல்கள் எவரால் மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றியும் விவரித்துள்ளது. அதன்படி,

பெண்களுக்கு ஆண்களால் நிகழும் சீண்டல்கள்

ஆண்களுக்கு பெண்களால் நிகழும் சீண்டல்கள்

ஓரே பால் (பெண்கள் பெண்களை, ஆண்களை ஆண்கள்) சீண்டல் செய்தல்

சக துன்புறுத்தல்

மேற்பார்வையாளர்களால் கீழ் நிலை ஊழியர்களை சீண்டலுக்குட்படுத்துதல்

கீழ் நிலை ஊழியர் /ஊழியர்கள் மேற்பார்வையாளரை சீண்டலுக்குட்படுத்துதல்

ஊழியர் அல்லாத ஒருவர் அதாவது வாடிக்கையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், விற்பனையாளர்கள், புறச்சேவை ஊழியர்கள் மற்றும் சேவை வழங்குனர் ஆகிய மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் துன்புறுத்தல்

பௌதீக ரீதியான (உடல்) சீண்டலுக்கான உதாரணங்கள்

தேவையற்ற முறையில் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தல்

தேவை இல்லாமல் ஒருவருடன் நெருங்கி நிற்றல் (அருகாமையில் நெருக்கமாக நிற்றல்)

தொடுதல், பாசமாக செல்லமாக பேசுதல், தொட்டு தடவுதல், உடலை அழுத்துதல், கட்டிப்பிடித்தல் அல்லது கிள்ளுதல்

ஒருவரது பிறப்புறுப்பை தேய்த்தல் அல்லது உரசல்

பாலியல் வன்புணர்ச்சி

வாய்மொழி மூலமான பாலியல் சீண்டல்

பாலியல் கருத்துக்கள் அல்லது குறிப்புக் கூறல்

ஒருவரின் பாலியல் அடையாளத்தை அல்லது ஒருவரது பாலினத்தை கேலி செய்தல்

ஒருவரின் உடல் தோற்றம், வயது, தனிப்பட்ட வாழ்கை, அவர்களின் வாழ்கை நிலை அதாவது அவர் திருமணமானவரா அல்லது திருமணமாகதவரா மற்றும் குழந்தை பேரு உள்ளமை அல்லது இல்லாமை ஆகியவை பற்றி கருத்து கூறல்

ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொடர்புடைய நகைச்சுவைகள் அல்லது கதைகள் கூறல், ஒருவரின் பாலியல் ரீதியான கனவு, கற்பனைகளை விசாரித்தல்

வேலை தொடர்பான கலந்துரையாடல்களை பாலியல் ரீதியான தலைப்புகளுக்கு திசைமாற்றல்

பாலியல் ரீதியான உபகாரங்களை கேட்டல்

வேலை வாய்ப்பிற்காக பாலியல் ரீதியான உபகாரங்களை கேட்டல்

விசில் அடித்தல் அல்லது பாலியல் ரீதியான ஒலியை எழுப்புதல்

ஆபாசமான மற்றும் அபத்தமான மொழியை பிரயோகித்தல்

அடையாளமற்ற தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தல்

விரும்பத்தகாத சமூகம்சார் அழைப்பை மீண்டும் மீண்டும் செய்தல்

அவதூறுகள் மற்றும் வதந்திகளை பரப்பல் மற்றும் அதை பற்றி அரட்டை செய்தல் (புறம்பேசல்)

பாலியல் ரீதியான சைகைகள்

வெறித்து பார்த்தல், ஏளனமாக வெறுப்புடன் சாய்வாக நோக்குதல், கீழ் கண்ணால் பார்த்தால், கண்ணடித்தல் அல்லது பார்த்தல்

பறக்கும் முத்தம் கொடுத்தல், நாக்கை சுழற்றுதல் அல்லது தனது உதட்டை நாக்கால் ஈரப்படுத்துல்

கைகளால் /விரல்களால் பாலியல் ரீதியான செய்கைகள் செய்தல்

பாலியல் ரீதியான செயல்களை நடித்துக் காட்டல்

காட்சிப்படுத்தல் தொடர்பான பாலியல் சீண்டல்

தேவையற்ற மின்னஞ்சல்கள், குறும்செய்திகள் அனுப்புதல் அல்லது பாலியல் தொடர்புடைய வெளிப்படையான நகைச்சவைகளை பதிவிடல்

அடையாளம் தெரியாத நபராக கடிதங்கள், மின்னஞ்சல்கள், குறுந்செய்தி அல்லது குறுந்தகவல் அனுப்புதல்.

முறையற்ற ரீதியாக சமூக வலைத்தளங்களில் முன்னேறுதல்

பாலியல் ரீதியான வரைபுகள், எழுதுதல்

பாலியல் ரீதியான படங்கள், புகைப்படங்கள், சுவரொட்டிகளில், நாட்குறிப்பு, கணனி திரை வால்பேப்பர் அல்லது பாலியல் தொடர்பான வலைத்தளங்களை வெளிப்படையாக காட்சிப்படுத்தல்

வேறு ஒருவருடைய பாலியல் தொடர்புடைய, அவர்களுக்கு தெரியாமல்/ அவர்களின் விருப்பமின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள்/ நிகழ் படங்களை பதிவிடல்

இதேவேளை, பாலியல் சீண்டல்களினால் பெண் தொழிலாளர் முகம் கொடுக்கும் உளரீதியான பாதிப்புக்கள் மற்றும் அது எவ்வாறு அவர்களது பொருளாதாரத்தை பாதிக்கின்றது என்பதுடன், அது எவ்வாறு உற்பத்தித்துறையையும் பாதிக்கின்றது என்பதை விளக்கப்படுத்தியுள்ளது.

பாலியல் சீண்டலினால் ஏற்படும் இழப்பு என்ன?

பாலியல் சீண்டல் செயல் என்பது ஒரு முக்கியமற்ற, வினோதமான, பாதிப்பற்ற செயலல்ல. பாலியல் சீண்டல் என்பது அச்செயலில் ஈடுபட்ட நபர் மற்றும் சம்பவம், சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு நீண்ட கால எதிர்மறையான தாக்கத்தை கொடுக்கும். இது ஒரு பணியாளருக்கு

பாதுகாப்பு மற்றும் சௌகரியம்

உடல் ஆரோக்கியம்

உளவியல் நல்வாழ்வு

உற்பத்தித்திறன் (தொழில்ரீதியான)

தொழில் நிபந்தனை மற்றும் தொழில் சூழ்நிலை மற்றும்

அவள் அல்லது அவனின் உடலுக்கான உரிமை

ஆகியவற்றில் ஒரு மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ஊழியர் பாலியல் சீண்டல் காரணமாக அதிர்ச்சி, அறுவெறுப்பு, குழப்பம், கோபம், தாழ்மைப்படுத்தல், அவமானம், உதவியற்றநிலை,மனக்கடுப்பு, சுயபரிதாபம், பலவீனமாக பாதிப்படையக்கூடியவராக, மனக்கசப்பு, மனக்கலக்கம் மற்றும் மனஉளைச்சல் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். இது ஒரு ஊழியரை உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதனால் அவள் / அவனின் வேலையில் ஊக்கநிலையற்ற நிலை, வருகைத்தராமை மற்றும் உற்பத்தித்திறனை குறைத்தல் ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு ஊழியருக்கு பாலியல் சீண்டலினால் ஏற்படும் இழப்புகள்

தொழில் வாய்ப்பை இழத்தல்

ஊழியர்கள் எரிச்சல் மற்றும் பதட்டத்தில்  கோபம், பலமின்மை மற்றும் அவமானத்தை உணர்தல்

சுயமரியாதையினை இழத்தல்

சீர்குலைந்த உறவுமுறை

உளச்சோர்வு, மன அழுத்தம், உயர் குருதி அழுத்தம் மற்றும் வேறுவகையான மன அழுத்தம் தொடர்புள்ள நோய்களுக்கு உள்ளாகுதல்

போதை மற்றும் மது பழக்கத்தின் மூலம் ஏற்படும் துஸ்பிரயோகம்

இராஜினாமா

தற்கொலை

ஒரு தொழில் தருனருக்கு பாலியல் சீண்டலினால் ஏற்படும் இழப்புகள்

உற்பத்தித்திறன் குறைதல் (ஊழியர்களின் கவனம் உற்பத்தியில் இல்லாத காரணத்தால்)

பலவீனமான அல்லது சேதப்படுத்தக்கூடிய தீர்ப்புகள்

நம்பிகையின்மை

ஊழியர்கள் கூட்டாக ஒற்றுமையாக செயற்படுதல் குறைதல்

ஊழியர்கள் தொழில் பட (படை) ஊக்கநிலையை இழத்தல்

ஊழியர்கள் அதிகமாக வேலைக்கு வருகைதராமை

விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வேலைத்தளத்தில் அதிகரித்தல்

திறமையான ஊழியர்களை இழத்தல்

இடருக்கான செலவு தொடர்பான நிதிநிலை செலவு அதிகரித்தல்

மருத்துவ செலவு அதிகரித்தல்

நீதி செயற்பாடுகளுக்கான செலவு அதிகரித்தல்

நிறுவனம் பற்றிய எதிர்மறையான கருத்து உருவாகுதல்

நிறுவனத்தில் பாலியல் ரீதியான பாகுபாடு உருவாதல்

வேலைத்தள பாலியல் ரீதியான பாதிப்புகளை இல்லாதொழிக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உறுதிசெய்யும் வகையில் சமவாயம் 190 இனை உலக தொழிலாளர் ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. இப்பிரகடனத்தில் இரண்டு நாடுகளே கையொப்பமிட்டுள்ளன. இலங்கை உட்பட பல நாடுகள் கையொப்பமிடவில்லை. இப்பிரகடனத்தில் கையொப்பம் இடும்படி இலங்கை அரசாங்கத்தினை நிர்ப்பந்திக்க வேண்டியுள்ளது. இதுதொழிற்சங்கங்களினதும், தொழிலாளர்களினதும் கடமையாகும். இப்பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிட்டால் பாலியல் சீண்டல்கள் தொடர்பான புதிய சட்டமொன்றினை இலங்கை அரசாங்கம் உருவாக்க நேரிடும். அப்படி நடைபெறின் இலங்கையின் பெண் தொழிலாளர்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆட்படாத தொழிலாளர்களாக பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும். ஆகையால் பெண் தொழிலாளர்கள் இவ்விடயம் தொடர்பில் தமது குரலை முதலாவதாக ஒலிக்கச் செய்ய வேண்டியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருப்போர்  மேற்குறிப்பிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக்கொள்ள விரும்பினால் அல்லது சமவாயம் 190 பற்றிய விழிப்புணர்வை சமூகத்திற்கு எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆக்கப்பூர்வமான புதிய வழிமுறைகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பினால் 076 2326600 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் செய்யும் அதேவேளை isdkandy என்ற முகநூல் பக்கத்தை லைக் செய்யலாம்.

நன்றி – யோகேஸ்வரி கிருஷ்ணன்

மூலம் – வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435