தனியார்துறையில் பணியாற்றும் ஆண் ஊழியர்களினதும் பெண் ஊழியர்களினதும் ஓய்வுபெறும் வயதை 60 ஆக நீடிப்பதற்கு ஊழியர் சேமலாப நிதிய சட்டத் திருத்த யோசனை மறைந்து கிடக்கும் பல பிரச்சினைகளை வெளிச்சத்தக்கு கொண்டுவந்திருப்பதாக தொழிற்சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கையில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 72 வயதாகவும் பெண்களின் சராசரி ஆயட்காலம் 77 வயதாகவும் தற்போது இருப்பதை அடிப்படையாகக்கொண்டு தனியார்துறை ஊழியர்களின் வயதெல்லை 60 ஆக உயர்த்தப்படவதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 2021 பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
ஆனால், முன்கூட்டியே தனியார்துறை ஊழியர்கள் தங்களது 55 வயதில் ஓய்வுபெற விரும்பினால், அவர்கள் தங்களது ஊழியர் சேமலாப நிதியத்தை வாபஸ் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவார்களா என்பது தெளிவில்லை.
ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்துவது தனியார்துறை ஊழியர்களைப் பொறுத்ததவரை, நல்லதொரு யோசனையே என்ற போதிலும், முன்கூட்டியே அவர்கள் ஓய்வுபெற விரும்பினால், 60 வயதை அடையும்வரை தடுக்காமல், அவர்களின் விருப்பப்படி செய்வதற்கான தெரிவு இருக்கவேண்டும் என்று சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச்சேவைகள் ஊழியர்கள் சங்கத்தின் இணைச்செயலாளரான அன்டன் மார்க்கஸ் தெரிவித்தார்.
பிரதமர் பட்ஜெட்டில் முன்வைத்த இந்த யோசனை வேறு எந்தவொரு நோக்கத்துக்காகவும் அல்லது பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு தனியார்துறை ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பில் இருந்து அரசு குறைந்த வட்டி வீதத்தில் நிதியைக் கடனாகப்பெறுவதற்கான ஒரு முயற்சியாகிவிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் கொள்கை சம்பந்தப்பட்ட தொழில் விவகாரங்களை ஆராய்வதற்கும் தொழில் அமைச்சருக்கு ஆலோசனை கூறுவதற்குமான உச்ச அமைப்பான தொழில் ஆலோசனைப் பேரவையின் அடுத்த கூட்டத்தில் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என்றும் மார்க்கஸ் குறிப்பிட்டார். அரசாங்க நடவடிக்கைகளுக்காக ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை பயன்படுத்துவதற்காக அந்த நிதியத்தின் 50,000 — 60,000 கோடி ரூபாவை ( ஊழியர்கள் மீளப்பெறுவதை ) அரசாங்கம் தடுத்துவைக்க பட்ஜட் யோசனை உதவும்.
ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து குறைந்த வட்டி வீதத்துக்கு அரசாங்கம் கடன்பெறவும் கடனை மீளச்செலுத்துவதற்கு பயன்படுத்துவதற்காகவும் முதலீடு செய்வதற்கும் அதை பயன்படுத்தமுடியும்.சேமிப்பு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வங்கிகளினால் பங்களிப்புச் செய்யக்கூடிய தொகைகளையும் விட கூடுதல் தொகையை அரசாங்கம் உள்நாட்டுக்கடனாக பெறுவதற்கான மிகப்பெரிய நிதிமூலமாக சேமலாப நிதியம் விளங்குகிறது.
மூலம் : வீரகேசரி