தரம் – 03 அதிபர் சேவை – உதவிக் கல்விப் பணிப்பாளர் விவகாரங்களுக்கு ஜனவரியில் தீர்வு

அதிபர் சேவை தரம் – 3 மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் அதிகாரிகளினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரங்கள் உட்பட வடக்கு மாகாண கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நேற்று முன்தினம் (29)  கல்வி அமைச்சின் கவனத்திறகு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே கல்வி அமைச்சின் அதிகாரிகளினால் குறித்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அதிபர் சேவை தரம் – 3 இற்கான ஆட்சேர்ப்பின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், மொழிவாரியாக ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும் என்ற நியமங்களுக்கு மாறாக தெரிவுகள் இடம்பெற்ற நிலையில், நாடளாவிய ரீதியில் சுமார் ஆயிரக்கணக்கான தமிழ்மொழி மூல வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் 167 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாவும் பாதிக்கபட்டவர்களினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கடந்த முறை போலன்றி இம்முறை மாவட்ட ரீதியில் அதிபர் தரம் – 3 இற்கான ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என்ற உத்தரவாதத்தினையும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கடற்றொழில் அமைச்சருக்கு வழங்கியுள்ளனர்.

அதேபோன்று, கடந்த காலங்களில் அனுபவத்தின் அடிப்படையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் கடமையாற்றி வருகின்ற அதிகாரிகள், இலங்கை கல்வி நிர்வாகச் சேவை தரம் – 03 (SLEAS-3) இனுள் உள்வாங்கப்படுவதற்கான நேர்காணல் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போதிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை.

இந்நிலையில் தங்களுடைய எதிர்பார்ப்புக்ளை நிறைவேற்றித் தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாகவும் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கடற்றொழில் அமைச்சர் கொண்டு சென்றிருந்த நிலையில் அதுதொடர்பாக ஆராய்ந்த கல்வி அமைச்சின் அதிகாரிகள், சுற்று நிருபங்களின் அடிப்படையில் போட்டிப் பரீட்சை ஒன்றின் ஊடாகவே சம்மந்தப்பட்ட நியமனங்களை வழங்க முடியும் என்பதினால் போட்டிப் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாச்சாலை மற்றும் தேசியப் பாடசாலைகளான யாழ். திருக்குடும்ப கன்னியர்மடம், வேம்படி மகளீர் பாடசாலை ஆகியவற்றில் நிலவுகின்ற கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர் வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குதல் உட்பட வடக்கு கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. புஸ்பகுமார தலைமையிலான அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம் : News.lk

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435