மனித குலத்தையே அச்சுறுத்தும் மனித வியாபாரம்! அலட்சியம் செய்யாதீர்!!!

உலகம் எவ்வளவுதான் நாளுக்கு நாள் நவீனத்துவம் அடைந்துவந்தாலும் மனிதர்களின் வாழ்வியலில், நாளுக்கு நாள் போராட்டமும் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது.

நவீனத்துவமும் கண்டுபிடிப்புகளும் மனித குலத்திற்கு பல்வேறு வகையில் நன்மைகளை ஏற்படுத்தினாலும் அது ஏதோ ஒரு விதத்தில் இந்த மனித சமுதாயத்திற்கே பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஒன்றாக மாறிவருகின்றமை அச்சமூட்டும் நிலையாகும்.

மனிதன் தனது வாழ்வியலை கொண்டு நடத்துவதற்காக பொருட்களை விற்பனை செய்தான், பண்டங்களை விற்பனை செய்தான். ஆனால் மனிதன் மனிதனையே விற்பனை செய்வான் என்பதை எவரேனும் கற்பனை செய்துகூட பார்த்திருப்போமா?

மனிதனின் உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் அளவுக்கு மனிதனின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படும் என்றுதான் எண்ணியிருப்போமா?

கேட்பதற்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தினாலும் இன்றைய நவீன உலகத்தில் மனித விற்பனையும், மனித உடல் உறுப்பு விற்பனையும் இடம்பெறுகின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குழுவினரால் சர்வதேசரீதியில் இந்த மனித வியாபாரம், மனித, உடல் உறுப்பு வியாபாரம் இடம்பெறுகின்றது. சிறுவர்கள் பெண்கள் ஆண்கள் என அனைவரும் இந்த அபாய வலைக்குள் திட்டமிட்ட முறையில் இரையாக்கப்படுகின்றனர்.

மனித வியாபாரம் (Human Trafficking) எவ்வாறு இடம்பெறுகின்றது?

பாதிப்பு நிலையிலுள்ள அல்லது அப்பாவியான மனிதர்கள் கபடகுணம் கொண்டவர்களால் அல்லது சுயநலத்திற்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் அல்லது ஏனைய நன்மைகளுக்காக வேண்டி ஏமாற்றத்திற்கு மோசடிக்கு உட்படுத்தப்பட்டு சுரண்டப்படுவதன் ஊடாக மனித விற்பனை நிகழ்கிறது. சுரண்டலானது பல வடிவங்களில் நிகழலாம். அவையாவன வலுக்கட்டாயமான உழைப்பு பாலியல் மோசடி, உடல் அங்கங்கள் அகற்றப்படல், வீட்டு அடிமைப் பணி மற்றும் அடிமைத்தனம் போன்றவையாகும்.

சிறுவர்கள் மனித விற்பனைக்கு இரையாகுவார்களா?

ஆம். குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் சிறுவர்களை ஏமாற்றலாம் அல்லது பெற்றோருக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க அல்லது வீட்டு பணியாளராக வேலை செய்ய சிறுவர்களை நிர்ப்பந்திக்கின்றனர். இந்த குற்றமானது பெரும்பாலும் குற்றவாளிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் இடம்பெறும். சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட நபருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு அறிமுகமான ஒருவராக கூட அவர் இருக்கலாம். சிறுவர் பாலியல் பணிகளுக்கென நிர்ப்பந்திக்கப்படலாம். இது ஒரு குற்றமாகும்.

பெண்கள் மனித விற்பனைக்கு இரையாகுவார்களா?

ஆம். பெண்களும் குறிவைக்கப் படுகின்றனர். விசேடமாக இளம் மற்றும் நடுத்தர வயது பெண்கள் தொழில், திருமணம், கல்வி வாய்ப்புகள் அல்லது தரமான வாழ்க்கை தொடர்பான கனவுகள் பற்றி போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர் அல்லது மோசடிக்கு உட்படுத்தப்படுகின்றனர். பிறகு வாக்கு அளிக்கப்பட்டதற்கு மாறாக விபச்சாரத்திற்கு, வீட்டுப் பணிப் பெண்களுக்கு அல்லது அடிமைத்தனத்துக்கு ஒத்த ஏனைய நிலைமைகளுக்கு அவர்களுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இந்நிலை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இடம்பெறுகின்றது.

எவ்வாறு குற்றவாளிகள் இப்பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றனர்?

பல்வேறு வழிகளில்…..
இடர்சூழ்ந்த நிலைகளில் காணப்படும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழில் ஒன்றை தேடுகின்றவர்களாக, பிறரின் உதவியை நாடுகின்றவர்களாக, கடன் சுமையால் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி காணப்படும் போது இந்நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவ்வாறான சமயங்களில் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மனித வியாபாரம் எனும் பொறியில் இப்பெண்களை சிக்க வைக்கின்றனர்.
பெரும்பாலும் உங்களையும் உங்கள் சூழ்நிலைகளையும் நன்கறிந்த ஒரு நபரே உங்கள் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் தந்திரமாக பேசி போலியான வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.

நன்கு அறிந்த நபரொருவர் உதவி செய்ய முன்வரும் போது அல்லது சிறப்பான சந்தர்ப்பம் ஒன்றை வழங்க முன்வரும்போது சம்மதம் தெரிவிக்கும் முன்னர் முதலில் அதனைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பது இதன் கருத்தாகுமா?

இணக்கம் தெரிவிக்க முன்னர் வழங்கப்பட்ட வாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களை கண்டறிய வேண்டும்.

வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்களா?

ஆம். இது இலங்கையிலும் இடம்பெறலாம். வீட்டுப் பணிப் பெண்களாக வேலை வாய்ப்பை பெற்றோர் பாதிக்கப்படலாம் ஆனால் பாதிக்கப்பட்ட நபர் கடல்கடந்து இருக்கும்போது இடர் அபாயத்துக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படும்.

காரணம் கடல் கடந்து சென்றுள்ள நாடு புதிதாக காணப்படுவதோடு அந்நாட்டு மொழியை புரிந்து கொள்ள முடியாதவர்களாக அந்நாட்டில் உள்ள ஒருவரை அறியாதவர்களாக அவர்கள் இருப்பர். இதன் காரணமாகவே இலங்கை சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் இருந்து பணியாளர்களாகவும் மற்றும் புலம்பெயர் உழைப்பாளர்களாகவும் செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொழில் ஒப்பந்தங்கள் கையொப்பமிடுவதும் ஊக்குவிக்கப்படுகின்றது.

மனித விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் தொழில்துறை பணியாளர்களை முறையற்ற வழிகளில் வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர். இதனால் அவ்வாறு வெளிநாடு செல்லும் பணியாளர்கள் பாதிக்கப்படும் நிலை அதிகரிக்கின்றது.

இதற்கு பெண்களின் சம்மதத்தை எவ்வாறு கண்டறிகின்றனர்?

தமது குடும்பத்தினதும் தமது வாழ்க்கை மேம்பாட்டுக்கும் என தொழில் ஒன்றை அல்லது பொருளாதார சந்தர்ப்பம் ஒன்றை தேடிக்கொண்டிருக்கும் பெண்களின் நிலைமையை குற்றத்தில் ஈடுபடுபவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். போலியான வாக்குறுதிகளை அளித்து நம்பச் செய்து பெண்களை ஏமாற்றுகின்றனர். குற்றவாளிகள் தாம் நன்மை அடையும் ஆதாயம் ஒன்றை பெற்றுக்கொள்ளவும் இவ்வாறு செயற்படுகின்றனர்.

பெண்கள் பணத்திற்காக பண்டங்களை போல விற்கப்படுகின்றன என்பது இதன் அர்த்தமா?

ஆம். வெளிப்புறத்தில் இவ்வாறு காணப்பட்டாலும்கூட அதுவே உண்மையாகும். மனித வியாபாரத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு நபரும் தமது பங்களிப்புகளுக்கான ஊதியத்தை பெற்றுக் கொள்கின்றனர் மிக ஆரம்பத்தில் ஏமாற்றி ஆட்சேர்த்துக் கொடுத்த நபருக்கும் கூட ஆதாயம் கிடைக்கின்றது.

வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்கென செல்லும் பெண்கள் எவ்வாறு முற்பாதுகாப்பில் ஈடுபடலாம்?

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (இ.வெ.வே.ப) பதிவு செய்துகொள்ள வேண்டும். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதிகாரிகளிடமிருந்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பிரத்தியேகமான மனித விற்பனை தடுப்பு பிரிவிடம் இருந்தும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆண்கள் மனித விற்பனைக்கு உட்படுவரா?

வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மூலம் ஏமாற்றப்படும் ஆண்களும் இருக்கின்றனர் (கட்டிட நிர்மாண பணிகள் விவசாய பண்ணைகள் தொழிற்சாலைகள் முதலியவற்றில்) ஒழுங்கற்ற தங்குமிட வசதியுடன் ஆபத்தான பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் சம்பளம் இன்றி அல்லது குறைவான சம்பளத்துடன் நீடித்த மணித்தியாலங்களுக்கு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

உடல் உறுப்பு விற்பனை என்றால் என்ன?

உடல் பாகங்கள் அகற்றப்படுதல் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இலங்கையில் இதுவரையில் உடல் உறுப்பு விற்பனை பற்றிய அறிக்கைகள் வெளியாகவில்லை. பிற நாடுகளில் சிறுநீரகம் மற்றும் ஏனைய உறுப்புகள் ஒருவரின் சம்மதம் இன்றி அகற்றப்பட்டு பெருந்தொகையான பணத்துக்கு விற்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலைமை இலங்கையிலும் எதிர்காலத்தில் ஏற்படலாம்.

மனித விற்பனை (Human Trafficking) மற்றும் ஆட்கடத்தலுக்கு (Human Sumuggling) இடையிலான வேறுபாடு யாது?

மனித விற்பனை என்பது சுரண்டலுக்கு உட்படுத்தும் நோக்கில் ஒரு நபரை ஏமாற்றி அல்லது நிர்ப்பந்தித்து ஒரு நாட்டிலும் அல்லது பிற நாட்டினுள் இடமாற்றம் செய்வதற்கு சட்டரீதியான அல்லது சட்டரீதியற்ற ரீதியில் வழி ஏற்படுத்தி ஏற்படுவதாகும்

ஆட்கடத்தல் என்பது ஒரு நாட்டின் எல்லையை சட்டவிரோதமான முறையில் கடக்க ஒருவருக்கு உதவி செய்து கட்டணத்தைப் பெற்றுக் கொள்வதாகும்

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் உதவிகள்

மனித விற்பனையால் பாதிக்கப்பட்ட நபர் எவ்வகை உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும்? உதவிகள் இலங்கை சட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றனவா?
மனித வியாபாரத்துக்கு உட்பட்ட நபராக நீங்கள் இருப்பின் நீங்களும் பாதிக்கப்பட்டவர் ஆகுவீர்கள். இலங்கையில் தண்டனை (திருத்தம்) சட்டம் இல. 16 வருடம் 2006இன் மனித விற்பனை குற்றத்தில் ஈடுபடும் நபர்களை விசாரணை செய்வதற்கு வழக்கு தொடர்வதற்கும் கடுமையான சட்டங்கள் காணப்படுகின்றன.

மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்ட நபர் என நீங்கள் இனம் காணப்படுவீர்கள் எனில் உதவிகளையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு. மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் என அரச பாதுகாப்பு புகலிடங்கள் காணப்படுவதோடு பாதிக்கப்பட்ட நபர் என்ற வகையில் ஏனைய பாதுகாப்பு சேவைகளை பெற்றுக்கொள்ள உரிமையும் உங்களுக்கு உண்டு

ஒரு சம்பவத்தைப் பற்றி முறைப்பாடு செய்தல்

இவ்வாறான குற்றம் ஒன்று தொடர்பான தகவல் வழங்கும் போது உங்களின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டுமா?
இல்லை. மனித வியாபாரம் குறித்த சம்பவம் பற்றிய உண்மையான தகவல்களை வழங்கும்போது பெயர் குறிப்பிடுவது அவசியம் இல்லை. ஆனால் தனிப்பட்ட விபரங்களை தகவல் தெரிவிப்பவர் என்ற ரீதியில் அல்லது பாதிக்கப்பட்ட நபர் என்ற ரீதியில் தெரிவிப்பதற்கு நீங்கள் தீர்மானித்தால் அத்தகவல்களின் அந்தரங்கம் கட்டாயமாக பேணப்படும்.

மனித விற்பனைக்கு எதிரான பிரசார நடவடிக்கைகள் நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த பிரசார நடவடிக்கைகள் ஆனது பலம்பெயர்தலுக்கான சர்வதேசஅமைப்பின் (IOM) ஒத்துழைப்புடன் நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் அமுலாக்கப்படுகிறது.

இந்தப் பொது மக்களுக்கான தகவல் மற்றும் ஊடக பிரசார நடவடிக்கையானது தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்கள் விளம்பர பதாகைகள் வீதி நாடகங்கள் போன்றவற்றினூடாக நாட்டின் உள்ளும் எல்லைகளிலும் நிகழக்கூடிய தொழில் மற்றும் பாலியல் சுரண்டலை முன்னிலைப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

மனித விற்பனையை எதிர்த்து போராட மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான அரசு ஊழியர்களுக்கு இடையிலும் சமூக நிறுவனங்களுக்கு இடையிலும் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு 18 பிரதான அரச நிறுவனங்கள் சார்ந்த பிரதிநிதிகளான தேசிய மனித விற்பனை எதிர்ப்புப் படையணியும் சேர்ந்து இக்குற்றத்தை தடுக்க முயற்சிகளை எடுத்து வருகின்றன.

பொதுமக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல் முன்னெடுக்கப்படும் மனித விற்பனையை கண்காணித்தல் மற்றும் எதிர்கால தேசிய மூலோபாய திட்டத்தின் முக்கிய கூறாகும்.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளாக மனித விற்பனையால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணல் பாதுகாப்பு மற்றும் பரிந்துரை தொடர்பில் அமைச்சரவையினால் வலியுறுத்தப்பட்ட நியம செயற்பாடுகள் மனித விற்பனை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு ஒப்புதல், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் போன்றவற்றில் மனித விற்பனை எதிர்ப்பிற்கான பிரத்தியேக அலகுகளின் உருவாக்கம் போன்றவற்றை குறிப்பிட முடியும்

2002 ஆம் ஆண்டு முதல் (IOM) நிறுவனம் இலங்கையில் மனித வியாபாரம் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு நல்கி வருகிறது. மேலும் (IOM) நிறுவனமானது பாதிப்புற்றவர்களுக்கு உதவவும் பரிந்துரை செய்வதற்கும் மனித விற்பனை தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குவதற்கும் நேரடி அழைப்பு இல்கம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றது. 0766 588 688 என்ற இலக்கத்தின் மூலம் யாரும் தொடர்பை ஏற்படுத்தமுடியும். (IOM) நிறுவனமானது மனித விற்பனையால் பாதிப்புக்கு அவர்களுக்கு உதவி வாரியத்தின் மூலமாகவும் உதவுகின்றது.

மனித விற்பனை தொடர்பான பொதுமக்களுக்கான தகவல் பிரசார நடவடிக்கையானது புலம்பெயர் களுக்கான சர்வதேச அமைப்பினால் நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித விற்பனை தொடர்பான கண்காணிப்பு மற்றும் எதிர்ப்புக்கான காரியாலயத்தின் நிதி அனுசரணையுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

உதவிக்கான தொலைபேசி இலக்கங்கள்

சிறுவர் தொடர்பான தகவல் எனில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை – 1929
முறைப்பாடு ஒன்று எனில் காவல் நிலையம் – 0112 392 917, 0112 421 111, 0112 444 444,119
அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை அழைக்கவும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சம்பவம் எனின்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் (SLBFE) 1989, 0112 879 900, 0112 884 707
மேலதிக தகவல்களைப் பெற புலம்பெயர்ந்த சர்வதேச அமைப்பு (IOM) நேரடி அழைப்பு இலக்கம் 0766 588 688
இது நிகழ்வதைக் காண நேரிட்டால்…. அலட்சியம் செய்யாதீர்கள்!!!

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435