அதிபர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் எட்டப்படாமையினை கண்டித்து இன்று (13) ஐந்து ஆசிரியர் சங்கங்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை கல்வியமைச்சுக்கு முன்பாக நடத்தவுள்ளன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் செயலாளருடன் அதிபர்கள் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி ஒரு வருடம் பூர்த்தியடைந்த நிலையில் இன்னும் எவ்வித தீர்வும் எட்டப்படாமையினால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2009ம் ஆண்டு வழங்கவேண்டிய பதவியுயர்வு, கடந்த 2010.02.01 அன்று அதிபர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு இன்றவரை பதவியுயர்வுகள் கிடைக்காமை, அரசியல் பழிவாங்கல்கள் என்ற போர்வையில் சுமார் 600 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க தீர்மானித்துள்ளமை, ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவையில் இணைந்தவர்களுக்கு சம்பள குறைப்பிற்கான நிரந்தர தீர்வின்மை, 2016ம் ஆண்டு மே 9ம் திகதி அதிபர் நியமனம் பெற்ற அதிபர் சேவையில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமை, இணைந்த மொழி, இரண்டாம் மொழி தொடர்பான தௌிவான தீர்வுகள் இன்னமும் எட்டப்படாமை, பதவிநிலை உத்தியோகத்தர் சேவையாக அதிபர் சேவையை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களுக்கு உரித்தான வரப்பிரசாதங்கள் வழங்கப்படாமை, இலங்கை கல்வி நிர்வாக விசேட ஆளணி வெற்றிடங்களுக்கு அதிபர்கள் நியமிக்கப்படாமை, கடமை நிறைவேற்று அதிபர்கள் இன்னும் பதவிகளில் நீடிக்கின்றமை, அதிபர்களுக்கான தடைதாண்டில் பரீட்சைகள் தொடர்ச்சியாக நடாத்தப்படாமை, அதிபர்களின் பதவி உயர்வுக்கான முகாமைத்துவ பாடநெறிகளுக்கு சகல அதிபர்களும் பின்பற்றக்கூடியவாறு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்காமை மற்றும் அதற்கான கட்டுப்பணம் அதிகமாக வசூலிக்கப்படுகின்றமை, 353 தேசிய பாடசாலைகளில் 260 பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை காணப்பட்டபோதிலும் அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை போன்ற காரணங்களை முன்வைத்து இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஆசிரிய- அதிபர்களின் தொழிற்சங்க ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், சுதந்திர கல்விச் சேவைகள் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம், பொது ஆசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து இவ்வார்ப்பாட்டத்தை நடத்துகின்றன.