அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று 30வது நாளாக தொடர்ந்து காரைதீவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டதாரிகளுக்கு விண்ணப்பபடிவம் வழங்குவது தொடர்பாக நேற்று போராட்டக்களத்தில் மாவட்ட வேலையற்றபட்டதாரிகளின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
அரசியல்வாதிகள் தொடர்பில் குறிப்பாக த.தே.கூட்டமைப்பு அரசியல் தலைமைகள் தொடர்பில் பட்டதாரிகள் மிகுந்த அதிருப்தியுடனிருப்தைக் காணமுடிகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தலைவர்களுக்கு வானகம் மற்றும் வீடு திருத்துவதற்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்படுவது தொடர்பிலும் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் சிறிதும் அக்கறை காட்டாதமை குறித்தும் விசனம் வெளியிட்டனர். அதேவேளை அவர்கள் சமையல் பணியிலும் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.
அத்துடன், நேற்றைய தினம் சிறுதூற்றல் மழையுடன் வானம் மப்பும் மந்தாரமுமாயிருந்தும் பெருமளவான பட்டதாரிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று 30ஆம் திகதி வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்து பட்டதாரிகளைச் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
அவர்கள் பட்டதாரிகளின் வேலையில்லாப்பிரச்சினை விடயத்தினை விரிவாக ஆராய்ந்து தொழில்வாய்ப்புவழங்குவது தொடக்கம் பயிற்சி சுயதொழில் உதவி மற்றும் பல தொழிநுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைசெய்யும்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கடந்த 23ஆம் திகதி மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த விசேட பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணைக்குக் கிடைத்த பிரதிபலனாக இக்குழு அமைக்கப்பட்டது.
மேலும், பொருளாதாரநிபுணர் மாரசிங்க எம்.பி தலைமையிலான அமைச்சர், எம்பிக்கள் நிபுணர்கள் உள்ளடங்கியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.முதலில் அவர்கள் 30ஆம் திகதி காரைத்தீவுக்கு வருகை தரவிருப்பதாக மாவட்ட வேலையற்றபட்டதாரிகளின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி- தமிழ் வின்