பாடசாலை வகுப்பறை ஒன்றில் இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை 45 ஆக அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலையில் ஒரு வகுப்பறையில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. அதாவது,
முதலாம் தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கைக்கு அமைய அதிபர்கள் செயற்படுவர். அதேபோல் புலமைப்பரிசில் பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர வகுப்புக்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும் குறித்த பாடசாலை அதிபர்கள் நடவடிக்கையெடுப்பர்.
மேலும் 37/2008 மற்றும் 33/2009 சுற்றறிக்கைகளுக்கமைய பாடசாலை அதிபர்களின் ஒப்புதலுடன் இடைத் தரய்களுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதற்கமைய இடமாற்றத்தால் வதிவிடம் மாற்றமடைதல்இ வெளிநாட்டிலிருந்து வருகை தரல், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படல், நீதிமன்ற நீதவான்கள், அரச விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் அரச மருத்துவர்கள், பாடசாலைகளில் மற்றும் கல்வி அமைச்சில் அல்லது அதனுடன் இணைந்த திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் இடைத் தரங்களில் சேர்த்துக் கொள்வதற்கு தகுதியானவர்களாவர்.
அவ்வாறே மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்பட்ட அநீதிகளால் தகுதிவாய்ந்தவர்கள்இ விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலுள்ள மாணவர்கள் போன்றவர்களும் இடைத் தரங்களுக்கு சேர்த்துக் கொள்வதற்குத் தகுதிவாய்ந்தவர்களாவர்.
அவ்வாறு மாணவர்களை உள்வாங்குவதில் விண்ணப்பங்களைக் கவனத்தில் கொண்டுஇ ஒரு வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கைணை அதிகரிப்பதற்காக தற்போது பின்பற்றப்பட்டு வரும் முறைகளைத் திருத்தியமைத்து மேலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறிமுறையை அறிமுகஞ் செய்வதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவிக்கையில்,
வகுப்பறை ஒன்றில் இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதாவது, 2016 ஆம் ஆண்டு முதல் வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காக 2011 ஆம் ஆண்டில் ஐந்து வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கடந்த அரசாங்கம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, 2016ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் அதனை 35 ஆகவும் குறைப்பதற்கு தீர்மானித்து இருந்தது.
இவ்வாறானதோர் சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம் வகுப்பறை ஒன்றில் இருக்கவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்து அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி அதனை அவமதிக்கும் ஒரு செயற்பாடாக இது அமைந்திருக்கின்றது.
எனவே, இதற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இதனூடாக அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தவறானது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட இருக்கின்றோம்.
உலக நாடுகளின் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து அதன் அடிப்படையிலேயே உயர்நீதிமன்றம் இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கியிருந்தது.
இலங்கையில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.
எனவேதான் அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானம் தவறானது என குறிப்பிடுகின்றோம். இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
கேள்வி : வகுப்பறை ஒன்றில் இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலமாக நடைமுறை ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் என்ன?
பதில் : 45 பிள்ளைகளுக்கு ஒரு வகுப்பில் கற்பித்துக் கொடுப்பதென்பது ஆசிரியர்களுக்கு ஒரு சிரமமான விடயம் அதுமாத்திரமன்றி வகுப்புகளின் கொள்ளளவும் போதுமானதாக இருக்காது. மிகச் சிறிய வகுப்பறைகளே இருக்கின்றன.
ஏற்கனவே, இலங்கையில் 100 மாணவர்களுக்கும் குறைவானவர்கள் கல்வி கற்கும் 3000 பாடசாலைகள் இருக்கின்றன.
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக கொண்ட உள்ள சிறிய பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
மாணவர்களின் எண்ணிக்கை ஒரு வரையறைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் நாள் 2011 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருந்தது. இலங்கையின் கல்வித் துறைக்கு கிடைத்த ஒரு வெற்றியாக அந்த தீர்ப்பு அமைந்திருந்தது.
எனினும், பிரபலமான பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாகுவதற்கான நோக்கமாகவே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு இருக்கின்றது.
ஒரு வகுப்பில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையை விட குறைவான மாணவர்கள் அந்த வகுப்பில் கல்வி கற்றால் அந்த பாடசாலையை மூட வேண்டிய நிலைமை ஏற்படும்.
எனவேதான் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றை நாடவுள்ளதாக ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.