பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குட்பட்ட சுமார் 70 உயரதிகாரிகளை விசாரணை செய்ய அரச நிருவாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாலியல் துன்புறுத்தல்கள், சட்டவிரோதமாக அனுமதி பத்திரங்கள் வழங்கல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட 70 அரசாங்க உயரதிகாரிகளே இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.
ஏற்கனவே குறித்த அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பதவி நீக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் உள்விவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகளுக்கு எடுப்பதற்கான அனுமதியை உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட 70 அதிகாரிகளில் 30 பேர் பிரதேச செயலாளர்கள் என்றும் அவர்களில் சிலருக்கு சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு, உத்தியோகப்பூர்வ கடமைகளுக்கு பாலியல் லஞ்சம் பெற்றமை போன்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில மாவட்டச் செயலாளர்கள் சட்டவிரோத மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கியுள்ளதாகவும் சில அதிகாரிகள் அதனை விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தனிப்பட்ட கோபங்களுக்காக தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை சட்டவிரோதமாக இடமாற்றம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கொழும்பு, அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலேயே முறைப்பாடுகள் அதிகம் கிடைத்துள்ளது.
மூலம்- தினகரன்