அரச ஊழியர்களுக்கு பொதுவான ஒழுக்கக் கோவை அவசியம்

அரச சேவையாளர்களை இனம் மதம் அடிப்படையில் பார்க்காது அவர்களுக்கென பொதுவான ஒழுக்கக் கோவையொன்று இருக்க வேண்டும் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபம் துறைசார் அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் உயர்மட்டக் குழுவின் தீர்மானத்திற்கு அமையவே வெளியிடப்பட்டிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் வைத்தியர்களுக்கும் பொதுவான உடைகள் உள்ளன. அதன் அடிப்படையில் அரச சேவையாளர்களுக்கும் பொதுவான உடையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் முகமாக நியமிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு நேற்று 5 ஆவது தடவையாக நடைபெற்றது. இத் தெரிவிக்குழு முன்னிலையில் நேற்று செயலாளர் சாட்சியமளித்தார்.

ஆடைதொடர்பில் அரச சேவையாளர்களுக்கு பொதுவான ஒழுக்கக்கோவையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டதுடன், பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து அரச அலுவலகங்கள் விடுத்த கோரிக்கைகளையடுத்தே புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில்; நான் ஆரம்பத்தில் ஆசிரியராகவே பணியாற்றினேன். அரச ஊழியர்கள்;சட்ட விதிகளை அறிந்துக்கொண்டு தான் வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

அரச சேவையாளர்களுக்கு ஆடைதொடர்பில் பொதுவான ஒழுக்க கோவையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் நீண்டகாலமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அச்சுறுத்தலான சூழல்நிலையின் பின்னர் பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த ஆடை தொடர்பிலான புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தது.

இச்சுற்றுநிருபம் தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியில் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. இச்சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு முன்னர் துறைசார் அமைச்சர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் குழுவினருடன் கலந்துரையாடியே சுற்றுநிருபத்தை வெளியிட்டோம். இது தொடர்பில் அமைச்சர் முதல் அனைவரும் அறிந்த விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கு அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் தடைவிதிக்கப்பட்டன. கடந்தகாலத்தில் இடம்பெற்றுவந்த பேச்சுக்கள் மற்றும் அவசரகாலச் சட்டத்தில் ஜனாதிபதி எடுத்திருந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே நாம் இச்சுற்றுநிருபத்தை வெளியிட்டிருந்தோம்.

இந்த சுற்றுநிருபத்தால் முஸ்லிம் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக எவ்வித முறைப்பாடுகளும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. முஸ்லிம் பெண்கள் சிலர் பணிக்குச் செல்லவில்லை என்றும் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை.

மனிதவுரிமைகள் ஆணைக்குழு மற்றும் பிரதமரின் அலுவலகத்திலிருந்து இரண்டு கடிதங்கள் கிடைத்திருந்தன. சுற்றுநிருபத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் அலுவலகத்திலிருந்து கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும் துறைசார் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார வெளிநாடு சென்றிருந்ததால் இப்பிரச்சினை தொடர்பில் எம்மால் கலந்துரையாட முடியாது போனது. இந்த விடயத்தில் மாற்றங்களை செய்ய நாங்கள் தயாரகவே உள்ளோம். அமைச்சரவையின் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் செவிமடுத்து செயற்பட தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி- அரசாங்க தகவல் திணைக்களம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435