2019வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு இன்று முதல் (ஜுலை 1ஆம் திகதி) அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் 11இலட்சம் அரச சேவையாளர்களுக்கு 2,500ரூபா இடைக்கால கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. காப்புறுதி, விசேட கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவுக்கான பிணக்குகளை தீர்த்தல், விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பிலான யோசனையும் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தக் கொடுப்பனவுகளுக்காக 40ஆயிரம் மில்லியனை வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுகீடு செய்துள்ளது.
11இலட்சம் அரச சேவையாளர்களுக்கும் 2,500 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக 20ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் வாழ்க்கைச் செலவுக்காக வழங்கப்பட்டுவரும் 7,800ரூபா அவ்வாறே தொடர்ந்தும் வழங்கப்படும்.
சேவையாளர்களுக்கும் 2,500ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக 20ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் வாழ்க்கைச் செலவுக்காக வழங்கப்பட்டுவரும் 7,800ரூபா அவ்வாறே தொடர்ந்தும் வழங்கப்படும். இதேபோன்று முப்படையினர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவும் இன்றுமுதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் முப்படையினருக்கு 23,231ரூபாவரை சலுகைக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அதிகாரிகளுக்கு 19,350ரூபா சலுகை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முப்படையினருக்கு வழங்கப்படும் வீட்டுக் கூலிக்கான கொடுப்பனவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. கமொண்டோ கொடுப்பனவு ரூ.1000ஆயிரத்திலிருந்து ரூ.5000வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,175மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான யோசனையும் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்ற 5இலட்சம் வரையிலான ஓய்வூதியக்காரர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச கொடுப்பனவு 2,800ரூபாவிருந்து 20,000ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் ஓய்வூதியக்காரர்களுக்கு வழங்கப்படும் 3,525ரூபாவும் அவ்வாறே வழங்கப்படும். ஒய்வூதியர்களின் பிணக்குகளை தீர்ப்பதற்காக 12ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவு 2,000ரூபாவிலிருந்து ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 32ஆயிரம் பேருக்கு மேற்படி கொடுப்பனவு வழங்கப்பட்டுவந்தது. என்றாலும், மேலும் 40ஆயிரம் பேர் விசேட தேவையுடையவர்களாக இனங்காணப்பட்டமைக்கமைய மொத்தமாக 72ஆயிரம் பேருக்கு இனிவரும் காலங்களில் மாதாந்தம் ரூ.5,000ம் வழங்கப்படவுள்ளது. இதற்காக 4,350மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள 21ஆயிரம் பேருக்கு அரசாங்கம் தற்போது ரூ.5,000ம் மாதாந்தம் வழங்கிவருகிறது. இந்தக் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள மேலும் 5,000பேர் இனங்காணப்பட்டள்ளனர். அதன் பிரகாரம் 26ஆயிரம் சிறுநீரக நோயாளர்களுக்கு ரூ.5,000வீதம் மாதாந்தம் வழங்க 1,840மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் நடைமுறைக்குவரும் இந்தக் கொடுப்பனவு அதிகரிப்புகளுக்காக மொத்தம் 39,365 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
தினகரன்