வடக்கில் உள்ள அரச துறை வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை இணைத்துக்கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் வராமல் தவிர்க்க வேண்டுமாயின் இளைஞர் யுவதிகளுக்கு உரிய தொழில் வாய்ப்புக்களை வழங்குவது அவசியம். வட மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் அரசாங்க வேலையில் இணைந்துக்கொள்ளும் போது தமது சான்றிதழ் தகுதிகளை உறுதிப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். யுத்தக்காலப்பகுதியில் அவர்களுடைய கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டமையே இதற்குப் பிரதான காரணம்.
அது மட்டுமன்றி யுத்தக்காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையானோர் வைத்தியசாலைகளிலும் பாடசாலைகளிலும் ஊதியமின்றி தொண்டர்களாக பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது மிகவும் அவசியம். அதனை உணர்ந்து அரசாங்கம் இரு தடவைகள் அவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கியுள்ளது. எனினும் இன்னும் பலர் தாம் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியதாக கூறிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் எங்கிருந்து எப்படி வருகின்றனர் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
பிரச்சினையான காலப்பகுதியில் சேவை செய்தவர்களுடைய சேவையை மதித்து அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கிய போதிலும் அதனை தவறாக பயன்படுத்தி தமது உறவினர்களுக்கும் நன்பர்களுக்கும் சிபாரிசின் அடிப்படையில் நியமனம் வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த தவறு எங்கே நடக்கிறது என்பது தெரியவில்லை. அதனை நீங்கள் தான் அறிவீர்கள். அரச ஊழியர்களுக்கான சம்பளம் எனதோ, செயலாளர்களினதோ அல்லது அரசியல்வாதிகளுடையதோ அல்ல. மக்களின் பணம். எனவே அரச ஊழியர்கள் தமது சேவையை பாகுபாடின்றி உண்மையாக செய்யவேண்டும்.
வட மாகாணத்தில் நிலவும் அரச வெற்றிடங்களை நிரப்புவதற்கு அதிகாரிகள் முழு முயற்சியெடுத்துள்ளனர். அவர்களுக்கான அனுமதியை வழங்குவது எனது கடமை. அதனை நான் செவ்வனே செய்வேன் என வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.