அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் ஊழல் மோசடியற்றதாக இருக்க வேண்டும்

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் ஊழல் மோசடியற்றதாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கணக்காய்வில் செயற்திறன் மிக்க அரச நிறுவனங்களை விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல் மோசடி உட்பட பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. கொலை, அரச துரோகம், பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு உள்ளது.

எனினும், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் பொது மக்களின் சொத்துக்களை மோசடி செய்பவர்கள் அல்லது துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக மரண தண்டனை உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை உருவாக்க பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.

பதவிக்காலம் முடிவடைய முன்னர் ஓரிருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிவிட்டுச் செல்ல முடியும் என்றார். பாராளுமன்றம் என்றவுடன் அங்கு நடக்கும் வாதப் , பிரதிவாதங்களை மாத்திரமே மக்கள் அறிந்து வைத்துள்ளனர். எனினும் அதற்கு அப்பால் நடக்கும் விடயதானங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. அரச நிர்வாகத்தின் முக்கிய விடயங்கள் பாராளுமன்றத்தில் நடக்கின்றன. அதில் கணக்கு பற்றிய குழுவின் செயற்பாடு மிகவும் முக்கியமானது.

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் ஊழல் மோசடியற்றதாக இருக்க வேண்டும். அரச சேவையில் பலர் சேவை புரிகின்றனர். தனியார் சேவையிலும் பலர் உள்ளனர்.

நாட்டின் அபிவிருத்திக்கு இவர்களின் பங்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரச மற்றும் தனியார் சேவையில் உள்ளவர்கள் ஒழுக்க விழுமியங்களுடன் செயற்பட வேண்டும். எமது அரசாங்கம் ஒழுக்க விழுமியங்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் பல முன்னெடுத்துள்ளதுடன் இன்னும் பல நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஊழல் மோசடியை இல்லாமல் செய்வதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரங்களை அதிகரித்து அதனை பலப்படுத்தினோம். தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவை நியமித்தோம்.

இவ்விரு ஆணைக்குழுக்களை சுயாதீன ஆணைக்குழுவாக செயற்பட இடமளித்துள்ளோம். கணக்காய்வு ஆணைக்குழுவுக்கு அப்பால் தேசிய கணக்காய்வு சேவையையும் விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.

உரிய தண்டனை இல்லாத காரணத்தினால்தான் தொடர்ந்தும் குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. நாம் எமது வேலைகளை சரியாக செய்தால் பிரச்சினை இல்லை. அரசியலில் மேலிடத்தில் உள்ளவர்கள் ஊழல் மோசடிகளை உடன் நிறுத்த வேண்டும். அதேபோன்று கீழ் மட்டத்திலுள்ள அரச அதிகாரிகள் நாளொன்றுக்கு நேரத்துக்கு சரியான முறையிலும் ஒழுக்கத்துடனும் சேவை செய்ய வேண்டும்.

அரச ஊழியர்கள் நாளொன்றுக்கு 8 மணித்தியாலங்களில் நான்கு மணிநேரம் சரியாக வேலை செய்தாலே போதுமானது.அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் ஊழல் மோசடிகளை நிறுத்தி விட்டு நேரத்துக்கு வேலை செய்தால் அதுவே இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு போதுமானதாக அமையும்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடி தொடர்பாக நான் ஆணைக்குழுவொன்றை நியமித்தேன். அந்த விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435