2016 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் அரச நியமனம் பெற்றவர்களுக்கு ஓய்வூதிய உரிமை கிடைக்கப்பெறாமை மற்றும் 180 நாட்களுக்கு மேலாக அரச சேவையில் ஈடுபட்டுள்ள அமைய, ஒப்பந்த, தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குவதற்கு பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இலங்கை சுதந்திர அரச தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (05) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வுறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.
மேலும், இக்கலந்துரையாடலில் கல்வி, ரயில்வே, சுகாதாரம் உட்பட அரச தொழிற்றுறைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பரீட்சைகளில் பொதுவான நியதிகளை கடைப்பிடிப்பது குறித்தும் கோரிக்கைள் ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்தப் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு தன்னாலான அதிகபட்ச தலையீட்டை மேற்கொள்வதாக இதன்போது உறுதியளித்த ஜனாதிபதி, ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் பற்றிய தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எழுத்து மூலமாக விரைவில் தன்னிடம் சமர்ப்பிகுமாறும், இப்பிரச்சினைகள் தொடர்பில் அந்தந்த அமைச்சுக்களின் ஊடாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.