அரச நிறுவனங்களினுள் மோதல் நிலைமைகளுக்கு இடமளிக்காது அமைதியை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
கடந்த சில தினங்களில் சில அரசாங்க நிறுவனங்களினுள் ஏற்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சர்வதேச ரீதியாக நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் அமைதியைப் பேணி அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அந்தவகையில் அரச நிறுவனங்களினுள் வன்முறைக்கு இடம்வைக்காது இருப்பது தொழிற்சங்க பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.