அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு சுகாதார அமைச்சர் அச்சுருத்தல் விடுத்துள்ளமை தொடர்பில் தொழில் அமைச்சர் டப்ளியு. டி. ஜே செனவிரத்ன நாளை (23) நேரில் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
நாளை மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ள இச்சந்திப்பில், குறித்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே தின கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் தமக்கு அச்சுருத்தல் விடுத்துள்ளதாக தொழில் அமைச்சரிடம் முறைப்பாடு செய்ததுடன் இது தொடர்பில் அமைச்சர் தலையிட்டு தீர்த்து வைக்கவேண்டும் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் நாளை அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, மேற்படி விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அரசாங்கம் எந்தவொரு தொழிற்சங்கத்தையும் அடக்க முயலவில்லை எனவும், அது அரசாங்கத்தின் கொள்கையல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தொழிற்சங்கங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கும் நோக்கம் தமக்கில்லையென ஜனாதிபதியும் பிரதமரும் ஏலவே தெரிவித்துள்ள நிலையில் சர்வதேச தொழிற்சங்க சட்டங்களுக்கமைய தொழிற்சங்கங்களை பாதுகாக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை. பிரச்சினைகளை பேச்சுவாரத்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். என இச்சந்திப்பில் மிக முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தாம் நம்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தினகரன்/ வேலைத்தளம்