பாடசாலை விடுமுறை காலத்தில் ஆசிரியர்களுக்கான சம்பளம் இடைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டு போலிப் பிரசாரங்கள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி இந்த முறைப்பாட்டை எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளார்.
கல்வி அமைச்சின் ஊடாக பிரிவு பணிப்பாளர் சுகத் தர்மஸ் ஸ்ரீ, அமைச்சின் ஊடக செயலாளர் கல்ப குணரத்ன, சட்ட அதிகாரி சுரங்கி பெரேரா ஆகியோரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.
பாடசாலை விடுமுறை மாதங்களில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த கல்வி அமைச்சு, அமைச்சரவை பத்திரமொன்றை தயாரித்து வருவதாக வெளியாகியுள்ள பொய்யான தகவல்களுக்கு எதிராக கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும், ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பதுளையில் வைத்து குறிப்பிட்டதாக அண்மையில் சில ஊடகங்களில் தகவல் வெளியாகியது.
இந்த தகவலை கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு நிராகரித்துள்ளது.
சில குழுக்கள் திட்டமிட்ட வகையில் வேண்டும் என முன்னெடுத்தமையினால் கல்வி அமைச்சருக்கும் கல்வி அமைச்சின் நற்பெயருக்கு பெரும் குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும், பரீட்சை நடைபெறும் இக் காலப்பகுதியில் ஆசிரியர்கள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடுவதன் மூலம் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு உண்மைக்கு புறம்பான செய்தியை தயாரித்து அதை பகிரங்கப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்த குழு, மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.