இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
இலவச கல்வியை சீர்குலைக்கவும் கல்விச்சேவையில் அரசியல் தலையீடுகளை அதிகரிக்கவும் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆசிரியர்களும் அதிபர்களும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
மார்ச் 3ஆம் திகதி கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானம் மூலம் இலவச கல்வியின் தரத்தினை குறைத்து பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க மைத்திரி-ரணில் அரசாங்கம் முனைவதாக குறித்த சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கடந்த மாதம் மூன்றாம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி கொண்டுவரப்பட்ட பாடசாலை கல்வி அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்கள் மிகவும் பாரதூரமானதாக அமைந்துள்ளது. இதனடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பதவியுயர்வுகளை மீள வழங்குதல், குறித்த காலப்பகுதிக்கான சம்பள உயர்வுகளை வழங்குதல், பதவியுயர்வு தடைப்பட்டிருப்பின் குறித்த காலப்பகுதிக்கான நிதியுதவியினை மீள வழங்குதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இரு பிரதான கட்சிகளின் அனுமதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
இவ்வாறான தீர்மானங்களை அரசியல் சுயநலனுக்காக நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. மேலும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் என்ற போர்வையில் 4680 பேரை கல்வித்துறையில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கல்வித்திணைக்களத்தின் பரிபாலன சேவையில் உள்ள 68 பேர், 616 அதிபர்கள், 1780 ஆசிரியர்கள், நான்கு ஆசிரிய பயிலுனர்கள் 2212 ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் என்போரை இணைத்துக்கொள்ள தீர்மானித்தள்ளது.
குறித்த தீர்மானம் இலவச கல்வியின் தரத்தினை இல்லாமலாக்குவதற்கான தீர்மானங்களாகும். அத்தோடு நல்லாட்சி அரசாங்கம் எனும் போர்வையில் இரு பிரதான அரசியல்கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் சதித்திட்டமாகவே இது அமைந்துள்ளது. குறித்த தீர்மானங்களுக்கு முழு அரசாங்கமுமே மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். குறித்த நியமனங்கள் மற்றும் ஆட்சேர்ப்புகள் முன்னைய அரசாங்கத்தில் இருந்து சலுகைபெற்று கொண்டவர்களும் பல வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள முனைகின்றனர்.
அரசியல் சுய இலாபத்திற்காக கல்வித்துறையிலுள்ள அரச சேவையாளர்களை இவ்வாறு இணைத்துக்கொள்வதன் மூலம் இலவச கல்வியின் தரத்தினை குறைத்து பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க மைத்திரி–ரணில் அரசாங்கம் முனைகின்றது. குறித்த அராஜகத்தன்மையான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து கல்வி அமைச்சின் திணைக்களத்தின் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியதிகாரிகள் உள் ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
வேலைத்தளம்- நன்றி- வீரகேசரி