ஆசிரியர்கள் நாளைய தினம் (26) மேற்கொள்ளவிருந்த ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளன.
இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக, கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் அதிபர் – ஆசிரியர் தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானதாக தெரிவித்து, அரசியல் ஊடான நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் தொடர்ச்சியாக கல்வித்துறைசார் பிரமுகர்களின் எதிர்ப்புக்களை கருத்திற்கொள்ளாமல், அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வியை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் மற்றும் ஒழுக்காற்று குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 14 பேருக்கு அரசியல் பழிவாங்கல் அடிப்படையில் கல்வித் துறையில் உயர்மட்ட நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தயாராவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாளைய தினம் எதிர்ப்பு போராட்டத்துடன், தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் காரணமாக தற்போது பாடசாலைகளில் இடம்பெறும் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால், அவற்றை பிற்போட நேரிடலாம். எனவே, இவை அனைத்திற்குமான பொறுப்பை தற்போதைய கல்வி அமைச்சரும், அரச சேவை ஆணைக்குழுவினருமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.