இடைக்கால வேதன திட்டத்துக்கான சுற்றறிக்கை வெளியிடப்படுமாறு வலியுறுத்தி ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இணைந்து நேற்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரிய, அதிபர் சேவை அகப்படுத்தப்பட்ட சேவையாக்கப்பட்ட நிலையில் – இடைக்கால வேதன அதிகரிப்பு தொடர்பாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தொழிற்சங்கங்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கிணங்க – கடந்த 3 ஆம் திகதிக்கு முன்னர் – சுற்றுநிருபமாக வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் சுற்றுநிருபமாக வெளியிடப்படாத நிலையில் – தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என்ற முன்வைப்புக்கிணங்க -நேற்று 14 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கலை 11 மணிக்கு – பேரணி ஆரம்பிக்கப்பட்டு – லோட்டஸ் வீதியூடாக ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது.
குறித்த பேரணியில் பல ஆயிரக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்தை பேரணி வந்தடைந்தபோது – தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் பிரதி செயலாளர் றோகண அபேரத்னவுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
2மணி நேர பேச்சுவார்த்தையின் பின்னர், இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பாக – முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக – எதிர்வரும் திங்கட்கிழமை – ஜனாதிபதி செயலகம் , கல்வியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கூடி ஆராய்ந்து வரும் 20 ம் திகதிக்கு முன்னர் தொழிற்சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி – தொழிற்சங்கத்துக்கு சாதகமான விடயம் குறித்து செய்யக் கூடியவற்றை அறிக்கையாக தருவதாக உறுதிவழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் – வரும் 26 ஆம்திகதி நடபெறவுள்ள சுகயீன லீவு போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும் எனவும் – இடைக்கால சம்பள திட்டத்துக்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்வரை – அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடமுடியாது எனவும் தெரிவித்தார்.
வெற்றியின் இறுதி தருணத்தில் – ஆசிரியர்கள் வரும் 26 ஆம் திகதி முழுமையாக போராட்டம் வெற்றிபெற ஒத்துழைக்கவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை -ஆர்ப்பாராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்லுமாறு பொலிஸார் கூறிய அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில், ஜனாதிபதி செயலகம் முன்பாகவே தொடர்ச்சியாக அதிபர் ஆசிரியர்கள் கூடியிருந்தனர்.
ஜனநாயக முறையில் அதிபர் ஆசிரியர் போராடியவேளை – ஆசிரியர்களை தாக்கிய பொலிஸாரின் அடாவடித்தன செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் – அரசு இத்தகைய செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் எனவும் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.