ஆசிரியர் ஆலோசகர் சேவை என்ற புதிய சேவையை ஆரம்பிக்க அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய ஆசிரியர் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கிய இலங்கை ஆசிரியர் ஆலோசனை சேவையின் பிரமாணக்குறிப்பு விரைவில் அதிவிசேட வர்த்தமானி மூலமாக வௌியிடப்படவுள்ளது என்று கல்வியமைச்சின் செயலாளர் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது கடமையாற்றும் ஆசிரிய ஆலோசகர்களை இச்சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கு முன்பாக அவர்கள் நியமனம் பெற்ற விதம், கல்வித்தகமை, தொழிற்றகமை, உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் தகவல்கள் மாகாண, வலய மட்டத்தில் திரட்டப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கல்வி நிருவாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை என்பன கல்வியமைச்சினால் நிருவாகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது 5வது சேவையாக இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
1970ம் ஆண்டுக் காலப்பகுதியில் முதன்மை ஆசிரியர் என்று அழைக்கப்பட்ட இப்பதவி, 1980ம் ஆண்டுக் காலப்பகுதியில் ஆசிரியர் ஆலோசகர் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை ஆசிரியர் சேவை என உருவாக்கப்பட்டு, தனியான சம்பள அளவுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் – தினகரன்