கோரிக்ைககள் நிறைவேற்றப்படவில்லை; ஆனாலும் தொழிற்சங்க நடவடிக்ைக எதிலுமே இப்போது ஈடுபட போவதில்லை; ஏனெனில் இது தேர்தல் காலம் என்கின்றது தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கம்
ஜனாதிபதி வேட்பாளர்களினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆசிரியர்களுக்கான எவ்விதமான விடயங்களையும் உள்ளடக்காது விட்டமை கவலைக்குரியது என்று தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை தலவாக்கலை விவ்ரெஸ்ட் விருந்தினர் விடுதியில் தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது ஆசிரிய சங்கத்தின் தலைவர் சரவணமுத்து பாலசேகரம் இக்கருத்தைத் தெரிவித்தார்.
‘ஆசிரியர்கள் சார்பான சிறந்த திட்டத்தை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான நிதிஒதிக்கீடு 6 சதவீதம் என அரசாங்கம் அறிவித்திருந்தாலும் கூட அந்த நிதியானது பாடசாலைக்கான கட்டடங்கள் நிர்மாணித்தல், பராமரித்தல், இலவச பாட நூல் அச்சிடல், இலவச சீருடை ,மதிய உணவு போன்றவற்றுக்கே செலவிடப்படுகின்றது. ஆனால் அந்த நிதி முழுமையாக அதற்குச் செலவிடப்படுகின்றதா என்பதும், இதில் ஆசிரியர்களுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கப்படுகின்றது என்பதும் கேள்விக்குறியாகும்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களின் சம்பள நிலுவையைப் பெற முடியாதவர்களும் அதிகமாகக் காணப்படுகின்றனர். அது போல சம்பள முரண்பாடுகளும் அண்மைக் காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அது மாத்திரமல்லாமல் நிதி நிறுவனங்களில் கடனைப் பெற்று திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவிருக்கின்றது.
சொந்த வீடுகள் இல்லாமல் பாடசாலை விடுதிகளிலும்,வாடகை வீடுகளிலும் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. எனவே இதனை கருத்திற் கொண்டு ஆசிரியர்களுக்கான ஒரு அபிவிருத்தித் திட்டத்தை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அல்லது இவர்கள் உறுதியான வாக்குறுதியை வழங்க வேண்டுமென்பது எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.
அரசாங்கம் சம்பளம் வழங்கும் ஒவ்வொரு தடவையிலும் உணவுப் பொருட்களுக்கான விலையையும் பாவனைப் பொருட்களுக்கான விலையையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. உதாரணமாக அரச ஊழியர் ஒருவரின் மாதாந்த செலவினம் இருபதாயிரம் ரூபாவாக இருக்குமாகவிருந்தால் சம்பள அதிகரிப்பைப் பெற்ற பின்னர் அவருடைய அதே செலவு மாதாந்தம் முப்பத்தையாயிரம் ரூபாவாகத்தான் அமையும். எனவே அவர் ஒரு பக்கம் பெறும் சம்பளத்தை மறுபக்கம் செலவு செய்பவராக இருப்பின் இந்த சம்பள அதிகரிப்பினால் அரச ஊழியர்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டப் போவதில்லை.
இன்று எமது நாட்டுக்கு சிறந்த உறுதியான கல்விக் கொள்கை அவசியமாக இருக்கின்றது.அந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்குமாகவிருந்தால் அல்லது ஒரு உறுதியான கல்விக் கொள்கை இல்லாமல் இருந்தால் கல்வியில் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கல்வியியல் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்களும்,பட்டதாரிகளும் ஆசிரியர் தரம் மூன்று_ ஒன்றுக்கு உள்வாங்கப்படல் வேண்டும் என்பது நியதி. அத்துடன் பயிற்றப்படாத ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி நிறைவு செய்து சித்தியடைந்த பின்னர் ஆசிரியர் தரம் மூன்று_ ஒன்றுக்கு உள்வாங்கப்படல் வேண்டும்.
அண்மையில் நடந்த அதிபர் தரம்_3 இற்கான தேர்விலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.அதிபர் தரம்_3 இற்கு பரீட்சைக்குச் சென்ற பல ஆசிரியர்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.இதில் கூடுதலான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.
அதுபோல் கல்வியமைச்சால் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள் முறைப்படி பின்பற்றப்படாமையும் பெரும் சவாலாக காணப்படுகின்றது.ஆசிரியர்கள் எட்டு வருடத்தில் இடமாற்றம் பெற வேண்டும். அதிபர்கள் ஐந்து வருடத்தில் இடமாற்றம் பெற வேண்டும். ஒரு சில பாடசாலைகளில் இருபது வருடத்துக்கு மேல் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் இருக்கின்றனர். இங்கு சுற்றுநிருபம் கடைப்பிடிக்கப்படுகின்றதா? அதிபரின் செல்வாக்கு அங்கு உள்ளதா? இதிலிருந்து தெளிவாகத் தெரிவது என்னவென்றால் கல்விக்கான நிரந்தர கொள்கைத் திட்டமிடல் அவசியம் என்பதாகும்.
அதுபோல் சுற்றுநிருபங்கள் பின்னபற்றப்படல் வேண்டும்.இதற்கான ஒரு சிறந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுமாகவிருந்தால்தான் கல்வியின் தரமும் கௌரவமும் பாதுகாக்கப்படும்.
எனவே எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்கள் ஆசிரியர் தொடர்பான ஒரு சிறந்த திட்டத்தையும், கல்விக்கான ஒரு சிறந்த கொள்கையையும் முன்வைக்க வேண்டும் என்பதாகும்.இது எமது தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கத்தின் வேண்டுகோளாக அமைகின்றது.
இவ்வாறு தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கத்தின் தலைவர் சரவணமுத்து பாலசேகரம் விளக்கிக் கூறினார்.
அண்மையில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் இத்தொழிற்சங்கம் கலந்து கொள்ளாதது குறித்து அவர் விளக்கமளிக்ைகயில் குறிப்பிட்டதாவது:
கடந்த காலத்தில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரான அபேய குணசேகரவுடனான சந்திப்பு ஒன்றில் சுமார் பன்னிரண்டு அம்சக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இதில் சம்பள முரண்பாடும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதற்கு அவர்கள் சுமுகமான ஒரு தீர்வை வருட இறுதிக்குள் பெற்றுத் தருவதாக அறிவித்திருந்தனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுமில்லை. அத்துடன் இவர்கள் முன்வைத்த சம்பள அளவுத் திட்டத்தில் நடைமுறையோடு பல வேறுபாடுகள் காணப்பட்டன. அது தவிர, எதிர்காலத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது எந்தவிதத்திலும் பொருத்தமற்ற விடயம். ஏனென்றால் இது வருடத்தின் இறுதி காலம் ஆகும்.அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் காலமும் ஆகும். அத்துடன் இக்காலகட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாறான பல காரணங்களால் நாம் இப்போது ஆசிரிய தொழிற்சங்க நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடப் போவதில்லை. இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம் – தினகரன்/ வேலைத்தளம்