ஆசிரிய பயிற்சி சான்றிதழ் உள்ள ஆசிரிய உதவியாளர்களை மட்டுமே ஆசிரியர் சேவையில் உள்வாங்க முடியும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில் பின்தங்கிய பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூவாயிரம் பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கோரியபோது பதிலளிக்கையிலேயே கல்வியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 2015ம் ஆண்டு க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மூவாயிரம் பேர் பின்தங்கிய பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளராளாக இணைக்கப்பட்டனர். அவர்களுக்கு வெறுமனே ஆறாயிரம் கொடுப்பனவு மட்டுமே வழங்கப்பட்டு நிறைய வேலைகளை பெற்றுக்கொள்கின்றனர். இப்பாடசாலைகளில் முழுமையான கற்றல் நடவடிக்கைகளிலும் அவ்வாசிரிய உதவியாளர்கள் ஈடுபடுகின்றனர். எனினும் போக்குவரத்துக்கான செலவு கூட அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களை ஆசிரியர் சேவை தரம் 3-2 இற்கு இணைக்க முடிந்தபோதும் அதற்கான நடவடிக்கையை ஏன் எடுக்காதுள்ளீர்கள் என்று அநுர குமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர், குறித்த ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைக்கும் போது ஆறாயிரம் கொடுப்பனவு வழங்கப்பட்டபோதிலும் இவ்வாண்டு அக்கொடுப்பவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். ஆசிரியர் சேவை பயிற்சிக்குப் பின்னர் இவ்வாசிரியர்களை தரம் 3-1 இல் இணைப்பதாக நியமனம் வழங்கும் போது குறிப்பிடப்பட்டது. தரம் 3-2 இல் இவர்களை இணைக்க முடியாது. 31,060 ரூபா சம்பளம் வழங்கப்படும் ஆசிரியர் சேவை தரம் 3 – 1 இற்குள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.