ஆறாயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 240,000 ஆசிரியர்கள் ‘சுகயீன லீவு’ போராட்டத்தில்!

நாட்டிலுள்ள 6000 பாடசாலைகளில் கற்பிக்கும் சுமார் 240,000 ஆசிரியர்கள் இன்று (13) சுகயீன லீவு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல மாத கால நிலுவைச் சம்பளம் வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதிபர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டம் ஒன்றை நடத்தினர். ஆசிரியர்களின் இக்கோரிக்கைகளை தீர்ப்பதற்குப் பதிலாக அரசாங்கம் காவல்துறையினரை கொண்டு ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் குண்டாந்தடி தாக்குதல் மூலம் ஆசிரியர்கள் ரத்தம் சிந்தி கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமின்றி இன்றைய கல்வி அமைச்சரின் சோற்றுப் பார்சல் கூட்டத்தினரால் குப்பைகளை கொண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு மிகவும் கீழ்த்தரமான மற்றும் பைத்தியக்கார தனத்திற்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 22 வருடங்களாக ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் உரிய சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை 1994 ஆம் ஆண்டு ஓரளவு சமந்தா சம்பளத்தை பெற்ற ஆசிரியர்கள் 1994 ஆம் ஆண்டு B.C பெரேராவின் சம்பள ஆணைக்குழுவின் பிரகாரம் பாரிய முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது இதன் மூலம் நம் நாட்டில் அரசு ஊழியர்களில் மிக குறைந்த சம்பளத்தை பெறுபவர்கள் ஆசிரியர் அதிபர்களாவர், கடந்த 22 வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முரண்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விபரம்,

முதலாம் வகுப்பு ரூபா 1498/=,
தரம் 2.1 ரூபா 1305/=
தரம் 2.2 ரூபா 1110/=
தரம் 3.1( பட்டதாரி) ரூபா 1073/=
தரம் 3.1 (விஞ்ஞான பீடம்) ரூபா 1010/=
தரம் 3. 1 (இரண்டு வருட டிப்ளோமா) ரூபா 924/=
தரம் 3.11 ரூபா 924/=

அதிபர்களின் ஒரு நாள் சம்பளம்

முதலாம் வகுப்பு ரூபா 1544/=, இரண்டாம் வகுப்பு ரூபா 1334/=
மூன்றாம் வகுப்பு ரூபா 1176/=
அதுமட்டுமல்லாது 2014 10 22 ஆசிரியர் சேவை யாப்பு மற்றும் அதிபர் சேவை யாப்பு ஆகியவற்றின் ஊடாக 30 மாத நிலுவை சம்பளத்தை இல்லாமல் செய்திருக்கின்றார்கள் இதன் மூலம் அதிபர் ஆசிரியர்களுக்கு கிடைக்கவேண்டிய சம்பள தொகையான ரூபா 22500/=, முதல் ரூபா90000/= வரையான தொகை அரசாங்கத்தினால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றது இது அதிபர் ஆசிரியருக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.

எனவேதான் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இந்த நாட்டின் அதிபர் ஆசிரியர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றது. தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக போராடிய ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் முக்கிய கோரிக்கைகளான,

• 22 வருட பிசி பெரேராவின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரித்தல்.
• புதிய துணைவிதிகள் ஊடாக கொள்ளையடித்த 30 மாத கால நிறுவத் சம்பளத்தை வழங்கல்.
• சகல ஆசிரிய உதவியாளர்களையும் ஆசிரியர் தரத்திற்கு உள்வாங்குதல்.
• 2016க்கு பின்பு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பள திட்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்தல்.
• பாடசாலைக்குள் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும். பாடசாலை நிர்வாகத்திற்கு இடையூறாக இருக்கும். ஆவணங்களை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட மேலதிக வேலையை விட்டு நீக்குதல்.
• பாடசாலை பராமரிப்புக்காக., பெற்றோரிடம் இருந்து பணத்தை திரட்டுவதை நிறுத்தி மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதத்தை ஒதுக்கி கொள்வது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய சுகயீன லீவு போராட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கல்வியமைச்சரிடம் நேரமொதுக்கி தருமாறு பல தடவைகள் கோரியும் அக்கோரிக்கை ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’வே உள்ளது என்று கவலை வௌியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின், இம்முறை வரவுசெலவு திட்டத்திலும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஏனைய ஆசிய நாடுகளின் ஆசிரியர் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் எமது நாட்டிலேயே மிகக்குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. எமது பிரச்சினை குறித்து இவ்வரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இன்று சுகயீன லீவு போராட்டத்தை ஆரம்பித்தோம் என்று தெரிவித்தார்.

குறித்த சுகயீன லீவு போராட்டம் தொடர்பில் கல்வியமைச்சு கருத்து தெரிவிக்கையில், சில தொழிற்சங்கங்கள் தமது அரசியில் லாபத்திற்காக அரசாங்க பாடசாலை ஆசிரியர், அதிபர்களை பயன்படுத்துகின்றன. ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டுள்ளன. சம்பள நிறுவையை பெற்றுக்கொடுப்பதற்கான முன்மொழிவுகள் அரசாங்க சம்பள மறுசீரமைப்புக்கான விசேட ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் நிலுவைச் சம்பளம் வழங்கப்படும் என்று கல்வியமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435