சமூக ஊடகங்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் இணைய குற்றங்களுக்கு எதிராக செயற்பட தேசிய அடிப்படையில் புதிய நிறுவனம் அமைக்கவும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இணைய பாதுகாப்பு மூலோபாயத்தினூடாக இப்புதிய சட்டக்கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இணைய குற்றங்கள் குறித்த பிரச்சினைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்வகையில் இச்சட்டம் உருவாக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இப்புதிய நடவடிக்கையினூடாக சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதோடு, சமூக ஊடக வலையமைப்புகளினூடாக வெறுப்பை பரப்பும் இன மற்றும் மத ரீதியாக முக்கியமான இடுகைகளை உடனடியாக அகற்றுவதற்கான ஒரு பொறிமுறையையும் அறிமுகப்படுத்த உள்ளது.
ஐ.நா. நிதியுதவி சட்டத்தின் கீழ் ‘வெறுக்கத்தக்க பேச்சை’ எதிர்த்துப் போராடுவதற்கான இலங்கையின் தற்போதைய சட்டமானது சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படுத்த பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கவலை வௌியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, சைபர் பாதுகாப்புச் சட்டத்தின் வரைவை பூர்த்தி செய்யுமாறு தனது அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிடம் கோரியுள்ளார்.
தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயத்தை செயல்படுத்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (டிஐபிஏ) அமைக்கப்படும்.
அந்த குற்றவாளிகளை அடையாளங்காண இலங்கையில் முறையான சட்ட மற்றும் கண்காணிப்பு முறை இல்லாததால் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான சைபர் கிரைம்கள் வேகமாக அதிகரித்து வருவதாக எஸ்.எல்.சி.ஆர்.டி அதிகாரிகள் defence.lk இணையதளத்திடம் தெரிவித்துள்ளனர்
இந்த குற்றங்களில் தனிநபர்களுக்கு எதிரான இணைய குற்றங்களான கடனட்டை மோசடி, பழிவாங்கும் ஆபாச, சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள், ஹேக்கிங்கிற்கு எதிரான குற்றங்கள் மற்றும் அறிவுசார் சொத்து திருட்டு மற்றும் இணைய குற்றங்கள் ஆகியவை அடங்கும்.