கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இத்தாலி மற்றும் தென்கொரியாவிலிருந்து கடந்த வாரம் ஆயிரத்து 800 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்கம் காரணமாக இத்தாலி மற்றும் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுள் பெரும்பாலானோர் நாடுதிரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வாழ்கின்றனர்.
இந்த நிலையில், வைரஸ் தொற்றுக்கு உள்ளான 46 வயதான இலங்கை பெண் ஒருவர் தற்போது கிரேசியா பகுதியில் உள்ள வைத்திசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை – பொக்குனுவிட்ட பகுதியை சேர்ந்த அவர், தனது கணவருடன் கடந்த 10 வருடங்களாக இத்தாலியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள இலங்கை பெண்ணின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை என மிலான் நகரில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் கணவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தூதரக காரியாலயம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 2 ஆயிரத்து 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோன வைரஸ் வேகமாக பரவிவரும் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அங்குள்ள இலங்கை தூதரக காரியாலயம் தெரிவித்துள்ளது.
விடுமுறையை பெற்றுக்கொள்ளக்கூடிய பெருமளவான தொழிலாளர்கள் அங்கிருந்து இலங்கைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில்; கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 5 ஆயிரத்து 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் 19 தொற்று தீவிரமாக பரவிவரும் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் ஊடாக இலங்கை வரும் அனைவரையும் 15 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பிரமுகர் முனையத்தையும் காண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச ரீதியில் இதுவரையில் 80 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 168 ஆக உயர்வடைந்துள்ளது.
சீனாவில் 80 ஆயிரத்து 152 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 945 அதிகரித்துளளது.
இவ்வாறான பின்னணியில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்த மீள்வதற்காக உலக வங்கி 12 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.