இலங்கையின் சைபர் பாதுகாப்பு சட்டவரைவு கேள்விகளை ஏற்படுத்துமா?

இலங்கையின் இணையதள பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பான சட்டவரைவு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு சட்டம் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள சட்டவரைவு ஆங்கில மொழியில் மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த சட்டவரைவு முன்வைக்கப்படவில்லை.

எவ்வாறிருப்பினும், இந்த சட்டவரைவு தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 7 நாட்கள் அதாவது ஜுன் மாதம் 6ஆம் திகதிவரையே சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த சட்டவரைவு தொடர்பில் தெளிவற்ற தன்மை உள்ளதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ‘வேலைத்தளம்’ மற்றும் ‘வெடபிம’ இணையதளங்களின் ஏற்பாட்டில், சைபர் பாதுகாப்பு சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்கேற்புடனான கருத்தாடல் நிகழ்வு ஒன்று கடந்த 4 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சி்ன் அதிகாரி ஒருவரும் உத்தியோகபூர்வமற்ற முறையில் கலந்து கொண்டார்

இதன்போது 15இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு, சைபர் பாதுகாப்பு சட்டம் தொடர்பில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அந்தக் கருத்துக்களின் சாரம்சத்தை இங்கு தருகின்றோம்.

சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் குறித்த சட்டத்தின்மூலம் முன்மொழிய்பட்டுள்ளதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தை கொண்டுவருதற்கான சட்டவரைவு குறித்து டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு இவ்வாறு விளக்கமளித்துள்ளது.

சைபர் பாதுகாப்பு சட்டம் எதற்காக?

1. தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான உபாயம் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துதல்.

2. சைபர் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு தீர்வு காணுதல், தவிர்த்தல் மற்றும் அவற்றுக்கு சாதகமாக பதிலளித்தல், சிறந்த சைபர் பாதுகாப்பு தொடர்பான சூழலை உருவாக்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏறபடுத்துதல்.

3. தகவல் தொடர்பாடலை பாதுகாப்பதற்காக இலங்கை சைபர் பாதுகாப்பு பிரதிநிதிகள் சபையை நிறுவுதல்.

முதலான காரணங்களின் அடிப்படையில் இந்த சட்ட வரைவை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் தனியான பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மற்றும் அதன் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தை புதிதாக ஸ்தாபிக்க இந்த சட்டவரைவில் முன்மொழியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்தக் கலந்துரையாடலில், குறித்த சட்டவரைவு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்வைக்கப்படாமல், ஆங்கில மொழியில் மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஆங்கில மொழியில் மாத்திரம் சட்டவரைவை முன்வைத்து, எவ்வாறு பொதுமக்களிடம் கருத்து கோர முடியும் என்றும், அதேநேரம், 7 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்கு பொதுமக்கள் தங்களது கருத்துக்களை முன்வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானதல்ல என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சட்டவரைபானது (ஆங்கில மொழியில்) அமைச்சரவை முன்வைக்கப்பட்டுள்ளது என்று அது தொடர்பில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சினால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்ததாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதேநேரம், பொதுமக்கள் தங்களது கருதுக்களை தெரிவிப்பற்கான கால அவகாசம் ஜுன் மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடைவதில்லை என்றும், அன்றை தினம் முதற்கட்ட கருத்துக்கோரல் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, சைபர் பாதுகாப்பு சட்டம் என்பதில் இந்த சட்டத்தின் மூலம் அர்த்தப்படுத்தப்படுவது என்ன? என்ற விளக்கப்படுத்தலில் தெளிவற்ற தன்மை உள்ளதாக ஊடகவியலாளர்களிடத்தில் கேள்வி எழுந்தது.

கடந்த ஏப்ரல் 21 சம்பவத்தின் பின்னர், அவசரமான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதேநேரம், சமூகவலைதளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோரை தண்டிப்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக மற்றுமொரு தரப்பினரும் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, இணையதளங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் அவதூறு நடவடிக்கைகள் குறித்து பொலிஸிலும், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சிலும் மற்றும் கணினி அவசர பதிலளிப்பு பிரிவிலும் முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கான சூழ்நிலைகள் உள்ளன.

இந்த நிலையில், சைபர் பாதுகாப்பு சட்டம் என்பது கொண்டுவரப்படுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. எனினும், இதற்கான காரணம் குறித்து இந்த சட்டவரைவில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பது கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

தற்போதைய கால சூழ்நிலைமைகளுக்கு மத்தியில் சைபர் பாதுகாப்பு சட்டம் என்பது அவசியமான ஒன்றுதான். எனினும், தனியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் ஒன்று இதுவரையில் இல்லை. இந்த நிலையில், சைபர் பாதுகாப்பு சட்டம் என்பது கொண்டுவரப்படுகின்றபோது, தனியுரிமை பாதுகாப்பு என்ற விடயத்தில் எவ்வாறான நிலைமையை ஏற்படுத்தும் என்ற நிலைமையும் உள்ளது. அதேநேரம், தகவல் அறியும் உரிமை சட்டத்துடன் இந்தப் புதிய சட்டம் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்ற விடயங்களும் ஊடகவியலாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த சட்டத்தின் உள்ளடக்கம் வெளிநாடு ஒன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதா? இந்த சட்டத்தின் ஊடாக இணையதள உட்கட்டமைப்பு தொடர்பான பொறுப்பு யாரிடம் கையளிக்கப்படவுள்ளது என்ற கேள்வியும் உள்ளது.

எவ்வாறிருப்பினும், இணையதள பயன்பாட்டின்போது, குறிப்பாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பாவணை மற்றும் அதனூடாக இடம்பெறும் சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகள் அவை தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த சட்டவரைவில் குறிப்பிடப்படவில்லை.

நாட்டில் பெருமளவானோர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களாக உள்ள நிலையில், அவை தொடர்பில் இந்த சட்டவரைவில் தெளிவான விளக்கப்படுத்தல்கள் இல்லை என்பது கருத்தாடலில் பங்கேற்ற ஊடகவியலாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

சைபர் பாதுகாப்பு தொடர்பாக நியமிக்கப்படவுள்ள மத்திய நிலையம் தொடர்பிலும் கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக அந்த சபை எவ்வாறு நியமிக்கப்படவுள்ளது? அதன் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வுசெய்யப்படுவார்கள்? அதன் தன்மை எவ்வாறானது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.

சைபர் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் தேவை குறித்து சர்வதேச ரீதியிலான செயற்பாடுகள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக பிரான்ஸில் சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெற்றது. அதாவது நியூஸிலாந்தின் க்றைஸ்ட் சர்ச் தாக்குதலின் பின்னர் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வு, வைராக்கியம் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய கருத்துகள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் ஆகியோரினால் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

இதேநேரம், இணையதளத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் மில்லியன் வெறுப்புணர்வு பிரசாரங்களை பேஸ்புக்கிலிருந்து அகற்றவேண்டிய நிலை பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருந்ததாக பதவி விலகவுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டிருந்தார். பேஸ்புக் நிறுவனமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேநேரம், குறித்த மாநாட்டில் கருத்து தெரிவித்திருந்த பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக் பயன்பாட்டின்போது, தனிநபர் அடிப்படையில் கண்காணிப்பதற்கான தகைமை தங்களுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும், சுயமாக கண்காணிக்கும் முறைமை ஒன்றை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. அதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் செலவளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக உலகின் வளர்முக நாடுகளே தங்களது சைபர் பாதுகாப்பு தொடர்பில் மீள்பரிசோதனை செய்து, புதிய யுக்திகளை கையாளும் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற நிலையில், இலங்கை போன்ற நாடுகளுக்கு சைபர் பாதுகாப்பு சட்டம் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்பது ஊடகவியலாளர் ஒருவரின் கருத்தாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், குறித்த கலந்துரையாடலில், மேற்கண்டவாறான கேள்விகளை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சிற்கு முன்வைப்பது தொடர்பிலும், இந்த சட்டவரைவு தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி விளக்கங்களைப் பெற்றுக்கொள்வற்கும் ஊடகவியலாளர்களிடம் இணக்கம் ஏற்பட்டது.

ஜுன் 6ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதற்கட்ட பொதுமக்கள் கருத்துக்கோரும் நிகழ்வில் பங்கேற்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதற்கட்ட பொதுமக்கள் கருத்துக்கோரல் நிகழ்வில் கலந்துகொண்டு, சட்டவரைவு தொடர்பான அமைச்சின் விளக்கங்களை அறிந்துகொண்டதன் பின்னர், அடுத்தகட்ட செயற்பாடுகளை தீர்மானிப்பதற்கு ஊடகவியலாளர்களும், சட்டத்தரணிகளும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

இதற்கமைய, சைபர் பாதுகாப்பு சட்ட வரைவு தொடர்பில் தங்களது கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இதன்போது பங்குபற்றுநர்கள் கவனம் செலுத்தினர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435