அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து தமது உயர்நிலை அதிகாரிகளை உடனடியான மீண்டும் அழைத்துக்கொண்டுள்ளது சீனா.
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகளில் 40 வீதமானவையை சீன நிறுவனங்களே மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த மாதம் 21ம்திகதி கிறிஸ்த்தவ மதஸ்தலங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாதுகாப்பு கருதி இலங்கையில் பணியாற்றிய உயர்நிலை அதிகாரிகளை சீன அரசு திருப்பி அழைத்துள்ளது. இதேவேளை, ஏனைய சீன தொழிலாளர்களையும் பணித்தளங்களுக்கு செல்லவேண்டாம் என்று அந்நாடு எச்சரித்துள்ளது.
பொறியிலாளர்கள் உட்பட உயர்நிலை முகாமைத்துவ அதிகாரிகள் உடனடியாக சீனாவுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். ஏனைய தொழிலாளர்கள் தளத்திற்கு செல்வதற்கு அஞ்சுகின்றனர். எனவே சீன நிர்மாணத்துறை கம்பனிகளின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுகிறது என்று கைத்தொழில் அதிகாரிகள் Business Times இற்கு தெரிவித்துள்ளனர். 21ம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கள் மற்றும் இனரீதியான தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இந்நிலை எதிர்வரும் மாதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையானது இலங்கையில் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தமது பணியை இடைநிறுத்துத்துவதற்கான காரணமாக அமையாது என்றபோதிலும் இது ஒரு நல்ல நிலையாக காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குடிவரவு, குடியகழ்வு திணைக்கள தகவல்களுக்கமைவாக கடந்த ஆண்டு மட்டும் இலங்கையில் 12,000 இற்கும் மேற்பட்ட சீனர்கள் தொழில் நிமித்தம் வீஸா பெற்றுள்ளனர். 6,229 வதிவிட வீஸாக்களும், கைத்தொழில் பேட்டைகளில் பணியாற்றுவதற்கு 1,012 வீஸாக்களும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக 2, 031 வீஸாக்களும், சீன அரச திட்டங்களில் பணியாற்றுவதற்காக 3,068 வீஸாக்களும் கடந்த ஆண்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி முகத்திடலுக்கு முன்பாக இடம்பெறும் நிர்மாணப்பணிகளில் மட்டும் சுமார் 2000 சீனர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.